சென்னை: தேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த நடிகை குஷ்பு, மீண்டும் தீவிர அரசியலுக்கு வந்துவிட்டதாக அறிவித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=68h9vz36&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நடிகையும், பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு, தேசிய மகளிர், குழந்தைகள் நல ஆணைய உறுப்பினராக கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி 27ல் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று (ஆக.,14) திடீரென அறிவித்தார். அதற்கான கடிதத்தை துறை அதிகாரிக்கு அனுப்பியதாகவும், அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.குஷ்பு விளக்கம்
ராஜினாமா குறித்து குஷ்பு அளித்த விளக்கம்: அரசியலில் 14 ஆண்டுகால சேவைக்குப் பிறகு, ஒரு இதயபூர்வமான மாற்றத்தை உணர்கிறேன். உயர்ந்த கட்சியாக விளங்கும் பா.ஜ.,வில் முழுமையாக செயல்படுவதற்காக தேசிய மகளிர் ஆணையத்திலிருந்து என் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். என்னுடைய விசுவாசமும், நம்பிக்கையும் எப்போதும் பா.ஜ., உடன்தான் இருக்கும். தீவிர அரசியலில் ஈடுபட முடியாதபடி தேசிய மகளிர் ஆணையத்தில் அதற்கென சில கட்டுப்பாடுகள் இருந்தன.அதனால், முன்னெப்போதும் இல்லாத உற்சாகத்துடன், நான் மீண்டும் தீவிர அரசியலுக்கு வந்துவிட்டேன். இப்போது நான் சுதந்திரமாக, முழுமனதுடன் சேவையாற்ற முடியும். சென்னை கமலாலயத்தில் நடக்க உள்ள கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளேன். வதந்தி பரப்புபவர்கள் அமைதியாக இருக்கலாம். என்னுடைய இந்த மறுவருகை நேர்மையானது. கட்சி மீதும், மக்கள் மீதும் நான் கொண்ட அசைக்க முடியாத அன்பின் காரணமாக எடுக்கப்பட்ட முடிவு. இவ்வாறு அவர் விளக்கமளித்துள்ளார்.பின்னணி
தீவிர அரசியலில் ஈடுபடுவதற்காக தேசிய மகளிர் ஆணைய பதவியை ராஜினாமா செய்ததாக குஷ்பு நேற்று கூறினாலும், கடந்த ஜூன் 28ம் தேதியே தனது பதவியை ராஜினாமா செய்ததாகவும், அதனை ஜூலை 30ம் தேதி துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதாக அரசிதழில் வெளியிடப்பட்டது. மேலும், சில நாட்களுக்கு முன்னதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் (ஆர்டிஐ), 'தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் அல்லது உறுப்பினராக இருப்பவர் அரசியல் கட்சி உறுப்பினராக இருக்கலாமா?' என்ற கேள்வி கேட்கப்பட்டது.இதற்கு பதிலளித்த தேசிய மகளிர் ஆணையம், 'அது பற்றி எந்த தகவலும் இல்லை' எனத் தெரிவித்துள்ளது. கேள்வி கேட்ட கபில் என்பவர், 'தேசிய மகளிர் ஆணையத்தில் இருந்துக்கொண்டு சமூக வலைதளங்களில் பா.ஜ., மற்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இதுபற்றி மத்திய தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறேன்' என்றார். இந்த ஆர்டிஐ கேள்வியும் குஷ்புவின் ராஜினாமாவுக்கு ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.தமிழக பா.ஜ., தலைவர் பதவி
இதற்கிடையே தமிழக பா.ஜ., தலைவராக உள்ள அண்ணாமலை, சர்வதேச அரசியல் தொடர்பான படிப்பில் சேர, வரும் ஆக.,28ம் தேதி லண்டன் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் லண்டன் செல்லும்பட்சத்தில் தமிழக பா.ஜ., தலைவர் பதவி வேறொருவருக்கு கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பதவியை கைப்பற்ற குஷ்பு முயற்சிப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அதற்காகவே தேசிய மகளிர் ஆணைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு தீவிர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும், நேராக சென்னை கமலாலயத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எப்படியாயினும், அண்ணாமலை வெளிநாடு செல்வது உறுதியானால் இன்னும் ஓரிரு வாரங்களில் புதிய தலைவர் பற்றிய அறிவிப்பு வெளியாகும்.அரசியல் பயணம்
* திரைப்பட நடிகையாக இருந்த குஷ்பு 2010ம் ஆண்டு திமுகவில் இணைந்து அரசியலில் கால் பதித்தார்.* பின்னர், 2014ல் திமுக.,வில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.* சுமார் 6 ஆண்டுகளாக காங்.,கில் இருந்து வந்த குஷ்பு, 2020-ம் ஆண்டு இறுதியில், அவர் அதற்கு முன்னர் பங்கெடுத்த அரசியல் கொள்கைகளுக்கு நேர் எதிர் கொள்கை கொண்ட பா.ஜ.,-வில் ஐக்கியமானார்.* 2021ல் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட குஷ்பு தோல்வியை தழுவினார்.* பின்னர், தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி அவருக்கு கிடைத்தது.* நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார். இருப்பினும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.* தேர்தல் நேரத்தில் உடல்நிலையை காரணம் காட்டி பிரசாரம் செய்யாமல் ஒதுங்கி இருந்தார். தேர்தலுக்கு பிறகும் கட்சி பணிகளில் நாட்டமின்றி ஒதுங்கி இருந்து வருகிறார்.* தற்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தீவிர அரசியலில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளார்.