"இயற்கையோடு வாழ கற்றுக் கொள்ளுங்கள்
கோவை: 'இந்திய பண்பாட்டை மாற்றாதவரை, இயற்கைச் செல்வங்களை காப்பாற்ற முடியாது' என, முகமது அலி பேசினார். பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரி, 'ஈகோ கிளப்' சார்பில் 'இயற்கையும் இலக்கியமும்' எனும் தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. இயற்கை அறக்கட்டளை செயலாளர் முகமது அலி துவக்கி வைத்து பேசியதாவது: நம்மிடையே நாகரிகத்தை கற்று கொடுத்த ஆறுகள், தற்போது மனிதனின் பிற்போக்கு செயலால் விஷமாகி வருகின்றன. ஆற்றோரங்கள் உடல் உபாதைகளை கழிக்கும் இடமாக மாறி வருகிறது. வெறும் 25 கோடி மக்களே வாழத் தகுதியுள்ள இந்திய தேசத்தில், தற்போது 121 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். மிதமிஞ்சிய மக்கள் பெருக்கத்தால் நம்முடைய வாழ்க்கைச் சூழல் மாசுப்பட்டு வருகிறது. தொடர்ந்து பின்பற்றப்படும் பண்பாடுகளை மாற்றும் வரை, இந்திய நாட்டின் இயற்கைச் செல்வங்களை மாற்ற இயலாது. பண்பாடு மாற்றம் பெறும் எனில் எல்லாவித முன்னேற்றங்களும் நடக்கும். நம்மிடம் இயற்கை சார்ந்த முறையான புரிதல் இல்லை. இயற்கையின் அருமையையும், தொடரும் தேவையும் பற்றிய சிந்தனை நம்முள் எழ வேண்டும். சமுதாயத்தில் நிறைய சம்பாதித்து பணக்காரனாக அடையாளம் காட்ட வேண்டும் எனும் எண்ணங்கள் இருந்தால் இயற்கையை காப்பாற்ற முடியாது. ஏனெனில் சுற்றுச்சூழலை பணம்தான் அழித்து வருகிறது. தற்போது இயற்கையை பாதுகாக்க மரம் வளர்க்கும் எண்ணம் மேலோங்கி வருகிறது. எதிர்காலங்களில் மரங்களின் நிலை பற்றிய தொலைநோக்கு பார்வை நம்மிடம் இல்லை. இயற்கை தன்னுடைய நிலையை சமமாக வைத்துள்ளது. அதை மனிதன், பிற்போக்குத்தனத்தால் குறுக்கீடு செய்து அழித்து வருகிறான். தமிழில் இயற்கை சார்ந்த படைப்புகள் அதிகம் வருவதில்லை. எழுத்தாளர்கள் இயற்கை பற்றி எழுத முன்வர வேண்டும். இவ்வாறு, முகமது அலி பேசினார்.கல்லூரிச் செயலாளர் நந்தகோபாலன் தலைமை வகித்தார். பேராசிரியர் ஜெயப்பிரகாஷ் வரவேற்றார். மாணவி சவுமியா நன்றி கூறினார்.