உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்து சமய அறநிலையத் துறையில் 38 உதவி கமிஷனர் பணி இடம் காலி

இந்து சமய அறநிலையத் துறையில் 38 உதவி கமிஷனர் பணி இடம் காலி

தமிழக இந்து சமய அறநிலையத் துறையில், தமிழகம் முழுவதும், 38 உதவி கமிஷனர் பணியிடம் காலியாக உள்ளதால், கோவில்களின் நிர்வாக பணிகளில், கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், கோவில்களில் பராமரிப்பு, நிர்வாக பணிகளை மேற்கொள்ள வசதியாக, இந்து சமய அறநிலையத் துறை, சேலம், கோவை, திருநெல்வேலி, மதுரை, சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை மண்டலங்களில், ஒரு இணை கமிஷனரும், கோவில்களின் எண்ணிக்கை அடிப்படையில், உதவி கமிஷனரும் நியமிக்கப்படுகின்றனர். இதில் மாத வருமானம், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள கோவில்களின் நிர்வாகத்தை, உதவி கமிஷனர்கள் மேற்கொள்கின்றனர். தமிழகம் முழுவதும், மாவட்ட கோவில்களின் நிர்வாகம், நகை சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்த, 38 உதவி கமிஷனர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையில், 58 உதவி கமிஷனர்களுடன், சமீபத்தில் தரம் உயர்த்தப்பட்ட, 16 கோவில்களின் உதவி கமிஷனர்களின் பணியிடங்களையும் சேர்த்து, 74 உதவி கமிஷனர்கள் இருக்க வேண்டும். ஆனால், 38 பணியிடங்களுக்கு அதிகாரிகள் நியமிக்கப்படாததால் பணிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உதவி கமிஷனர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளை, அந்தந்த மாவட்டத்திலுள்ள கோவில் நிர்வாக அதிகாரிகளில், கிரேடு, 1, 2, 3, 4 நிலையில் உள்ளவர்கள், பணி மூப்பு அடிப்படையில், உதவி கமிஷனர்களின் பணிகளை மேற் கொண்டு வருகின்றனர். உதவி கமிஷனர்கள், நிர்வாக அதிகாரிகளுக்கு, வேலைப்பளு அதிகரித்துள்ளதால், நிர்வாக பணிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் இத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படாதது, அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ''தமிழகத்தில் காலியாக உள்ள உதவி கமிஷனர் பணியிடங்களுக்கு அதிகாரிகளை நியமிக்கும் வகையில், தி.மு.க., ஆட்சியின் போது, 25 பேர், தமிழக தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் பயிற்சி, ஜூலை12ல் நிறைவடைகிறது. இவர்களுக்கு, அடுத்த வாரத்தில் பணி இடம் ஒதுக்கப்படும் என, எதிர்பார்க்கிறோம். இவர்களுக்கு பணி ஒதுக்கப்பட்டாலும், காலி பணியிடங்களின் எண்ணிக்கை, 15 ஆக குறையும். எனவே, தமிழக அரசு, இத்துறையில் உள்ள காலி பணியிடங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் வகையில், மேலும் கூடுதல் ஆட்களை தேர்வு செய்து, பயிற்சி அளிக்க வேண்டும்.'' இவ்வாறு அவர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை