பள்ளியில் 4 காஸ் சிலிண்டர் திருட்டு
திருப்பத்துார்: வாணியம்பாடி அருகே, அரசு பள்ளியில் சமையல் அறை கதவை உடைத்து, 4 காஸ் சிலிண்டர் திருடப்பட்டுள்ளது. திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொல்லகுப்பம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு, 73 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களுக்கு தமிழக அரசின் காலை உணவு திட்டத்தின் கீழ், தினமும் உணவு சமைத்து வழங்கப்படுகிறது. நேற்று வழக்கம்போல் மாணவர்களுக்கு, உணவு சமைக்க சமையலர் அறையை திறக்க சென்றார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, 4 காஸ் சிலிண்டர் திருட்டு போனது தெரியவந்தது. இதையடுத்து, மாற்று ஏற்பாடு செய்து மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இது குறித்து தலைமை ஆசிரியர் அந்தோனியம்மாள் அளித்த புகார்படி, வாணியம்பாடி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.