உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 6 பயோமெக்கானிக்கல் இன்ஜினியரிங்

6 பயோமெக்கானிக்கல் இன்ஜினியரிங்

மனித உடல் இயக்கத்தையும், இயந்திரவியல் நுட்பங்களையும் இணைத்து மனித குலத்திற்குப் பயன்படும் புதிய மருத்துவக் கருவிகளையும், தீர்வுகளையும் உருவாக்குவதே பயோமெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையின் நோக்கம். மனித உடலின் எலும்புகள், தசைகள், மற்றும் உள் உறுப்புகள் எவ்வாறு இயங்குகின்றன என்பதை உயிரியல் விளக்குகிறது. அதே நேரத்தில், பல்வேறு பாகங்கள் ஒருங்கிணைந்து ஒரு அமைப்பாக எவ்வாறு செயல்படுகின்றன என்பதை இயந்திரவியல் கோட்பாடுகள் விளக்குகின்றன. இவ்விரண்டையும் பயன்படுத்தி, மனித உடலில் ஏற்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நவீன அமைப்புகளை இந்தத் பயோமெக்கானிக்கல் பொறியியல் துறை உருவாக்குகிறது.

பணி

இத்துறையைத் தேர்ந்தெடுக்கும் பொறியாளர்கள் பல்வேறு அத்தியாவசிய மருத்துவ அமைப்புகளை உருவாக்குதல், பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர். குறிப்பாக, செயலிழந்த உள் உறுப்புகளுக்கு மாற்றாகச் செயல்படும் செயற்கை உறுப்புகள், டயாலிசிஸ் மற்றும் செயற்கை சுவாசக் கருவிகள் போன்ற உயிர்காக்கும் இயந்திரங்களை வடிவமைக்கின்றனர். விபத்து அல்லது நோயினால் கைகால்களை இழந்தவர்களுக்கு இயல்பாக இயங்கக்கூடிய உயர்தர செயற்கை மூட்டுகளையும் கைகால்களையும் உருவாக்குகின்றனர். ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள மருத்துவக் கருவிகளைத் தொடர்ந்து கண்காணித்து, அவற்றின் ஆயுளையும் செயல்திறனையும் அதிகரிக்க புதிய மாற்றங்களைச் செய்கின்றனர்.

கல்வி

இத்துறையில் நுழைய விரும்பும் மாணவர்கள் பள்ளி படிப்பிற்கு பிறகு உயிரியல், பயோமெக்கானிக்கல் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் அல்லது பயோமெடிக்கல் இன்ஜினியரிங் ஆகியவற்றில் இளநிலைப் பட்டம் பயிலலாம். அடிப்படை இளநிலைப் பட்டத்திற்குப் பிறகு, முதுநிலைப் பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெறுவது, இத்துறையில் ஆராய்ச்சி வாய்ப்புகளையும், உயர் பதவிகளையும் பெற வழிவகுக்கும். கல்லூரிப் பருவத்திலேயே ஆய்வக பயிற்சிகளையும், தொழிற்பயிற்சிகளையும் மேற்கொள்வது வேலைவாய்ப்பை எளிதாக்கும்.

பிரிவுகள்

பயோமெக்கானிக்கல் பொறியியலில் பல உட்பிரிவுகள் உள்ளன. மென் திசு இயக்கவியல் பிரிவில், உடலில் உள்ள தசைகள் போன்ற மென்மையான பாகங்களின் தன்மையைப் புரிந்து கொண்டு, அதே போன்ற உணர்வையும் செயல்பாட்டையும் தரும் செயற்கைத் திசுக்களை உருவாக்குகின்றனர். கேட்கும் திறன் சார்ந்த இயக்கவியல் பிரிவில், காதுகளின் உட்பகுதி பாதிப்புகளைச் சரிசெய்யும் கருவிகள், திரவத்தை வெளியேற்றும் சாதனங்கள் மற்றும் நவீன செவித்திறன் கருவிகளை வடிவமைக்கின்றனர். மறுவாழ்வு இயக்கவியல் பிரிவில், மூளை மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகளைக் குணப்படுத்த ரோபோடிக் தொழில் நுட்பங்களையும், பெரிய அறுவை சிகிச்சைகள் மட்டுமின்றி உடலின் உட்பகுதிகளை வெளியிலிருந்து இயக்கும் நவீன கருவிகளையும் உருவாக்குகின்றனர். மேலும், இத்துறை பட்டதாரிகளுக்கு உலகளவில் மருத்துவமனைகள், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் பயோடெக்னாலஜி உற்பத்தி நிறுவனங்களில் நல்ல வாய்ப்பு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !