வயிற்றுப்போக்கால் 64,541 பேர் பாதிப்பு குடிநீரை காய்ச்சி பருக அறிவுரை
சென்னை: சுகாதாரமற்ற உணவு, குடிநீர் மாசுபட்டால், 64,541 பேர் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். வரும் காலங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால், குடிநீரை காய்ச்சி பருக வேண்டும் என பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது. மழை காரணமாக வைரஸ், பாக்டீரியா தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. அதேபோல் குடிநீர் மாசுபாடு, அசுத்தமான உணவு வாயிலாக, ஜீரண மண்டலம் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, வயிற்றுப்போக்கு, அஜீரண பாதிப்புகள் அதிகரித்துள்ளன. சிலருக்கு அதனால் நீர்ச்சத்து இழப்பு, காய்ச்சல் ஏற்பட்டு, தீவிர பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. அதன்படி, தமிழகத்தில் இந்தாண்டில் இதுவரை வயிற்றுப்போக்கால், 64,541 பேர் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். அதேபோல், தனியார் மருத்துவமனைகளிலும் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டவர்கள், 50,000க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுள்ளனர். இந்நிலையில், வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து இருப்பதால், வயிற்றுப்போக்கு பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்பதால், குடிநீரை காய்ச்சி பருகவும், சூடான உணவுகளை உட்கொள்ளவும் பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது. இது குறித்து, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்தாண்டு 86,026 பேர் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். அதை ஒப்பிடும்போது, இந்தாண்டு பாதிப்பு குறைவு. ஆனால், நவ., டிச., மாதங்களில் பாதிப்பு அதிகரிக்கும். வயிற்றுப்போக்கு வந்தால் அலட்சியப்படுத்தக் கூடாது. உப்பு - சர்க்கரை கரைசல், நீர், மோர், பழச்சாறு, இளநீர் போன்றவற்றை போதிய அளவு அருந்தி, உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பாதிப்பின் தன்மைக்கேற்ற சிகிச்சைகளை உரிய நேரத்தில் எடுத்துக் கொள்வதும் அவசியம். ஆரம்ப நிலையிலேயே உப்பு - சர்க்கரை கரைசல், ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகள் எடுத்துக் கொண்டால், வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தி நலம் பெறலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.