வழக்கை ரத்து செய்ய கோரி ஆதவ் அர்ஜுனா மனு தாக்கல்
சென்னை: தன் மீது பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், த.வெ.க., தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா மனு தாக்கல் செய்துள்ளார். கரூர் துயர சம்பவத்தில், த.வெ.க., நிர்வாகிகள் கைதான நிலையில், அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பான வழக்கில், ஆதவ் மீது நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் மீது, கலவரத்தை துாண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், தன் மீது பதிவு செய்யப்பட்ட, இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆதவ் அர்ஜுனா வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், 'பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்' என்ற பாரதியாரின் வரிகள், வன்முறையை துாண்டும் நோக்கம் கொண்டதல்ல. அந்த வரிகளைத்தான் சமூக வலைதளத்தில் பதிவிட்டேன். அது சர்ச்சையாக பேசப்பட்டதும், 34 நிமிடங்களில், நீக்கி விட்டேன். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில் பதிவிடவில்லை அரசியல் உள் நோக்கத்துடன் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. என் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும். என் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும்' என கூறப்பட்டுள்ளது. இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வருகிறது.