உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "டாஸ்மாக் கில் சரக்குகள் கூடுதல் விலைக்கு விற்பனை : "குடிமகன்கள் குமுறல்

"டாஸ்மாக் கில் சரக்குகள் கூடுதல் விலைக்கு விற்பனை : "குடிமகன்கள் குமுறல்

டாஸ்மாக் கடைகளில் சரக்குகள், அதிகபட்ச சில்லரை விலையை (எம்.ஆர்.பி.,) விட, கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக 'குடிமகன்'கள் குமுறுகின்றனர். அதிகாலையில், 'பால்பூத்'தில் வரிசை கட்டி நிற்பது போல், சரக்கு வாங்க, டாஸ்மாக் கடைகள் முன், காலையிலேயே குவியும் 'குடிமகன்'களின் எண்ணிக்கை, தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கல்லூரி மாணவர்களில் 60 சதவீதம் பேருக்கு, ஏதாவதொரு போதைப் பழக்கம் உள்ளதாகவும், அவர்களில் 40 சதவீதம் பேருக்கு, குடிப் பழக்கம் இருப்பதாகவும் புள்ளி விவரம் ஒன்று, அதிர்ச்சி தகவல் தருகிறது.இவற்றை கவனத்தில் கொண்டுதானோ என்னவோ, தமிழக அரசு, டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் பீர், பிராந்தி உள்ளிட்ட சரக்குகளின் விலையை சமீபத்தில் உயர்த்தியது. 'இந்த விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள தாங்கள், டாஸ்மாக் கடைகளில் சரக்குகள், எம்.ஆர்.பி.,யை விட அதிக விலைக்கு விற்கப்படுவதால், கூடுதல் நிதிச்சுமைக்கு ஆளாகிறோம்' என, 'குடிமகன்'கள் குமுறுகின்றனர்.சென்னை, உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில், டாஸ்மாக் சரக்குகள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றன. டாஸ்மாக் பார்களில், தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் கப் போன்றவையும் பல மடங்கு லாபத்திற்கு விற்கப்படுகின்றன. அங்கு விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு(சைடிஷ்) பார் உரிமையாளர்கள் வைப்பது தான் விலை.மேலும், பல இடங்களில், 'டாஸ்மாக்' பார்கள், நள்ளிரவு, அதிகாலை என, காலவரையின்றி இயங்குகின்றன. டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பின், பார்கள் மூலம் சரக்குகள் விற்பனை நடக்கிறது. இப்படி சரக்குகளை, 'பிளாக்'கில் விற்கும் பணியில், இப்போது பெண்களும் ஈடுபடுவது குறித்து சில 'குடிமகன்'களே வருத்தம் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து, சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த குமார் கூறும்போது, 'டாஸ்மாக் கடைகள் பலவற்றில், ஒரு பீர், எம்.ஆர்.பி., யை விட, ஐந்து முதல் 10 ரூபாய் வரையும், பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட,' ஹாட்' வகைகள் 20 ரூபாய் வரையும், கூடுதலாக விற்பனை செய்யப்படுகின்றன. நள்ளிரவில் இயங்கும் டாஸ்மாக் பார்களை, போலீசார் கண்டும் காணாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. டாஸ்மாக் கடைகளைப் போல, பார்களும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் இயங்குவதை, போலீசார் உறுதி செய்ய வேண்டும். டாஸ்மாக் பார்களில் விற்கப்படும் தண்ணீர் பாக்கெட், 'சைடிஷ்' போன்றவற்றுக்கு, அரசே விலை நிர்ணயம் செய்ய வேண்டும்,' என்றார்.டாஸ்மாக் பணியாளர் சங்க மாநிலச் செயலர் தனசேகரன் கூறும் போது, 'டாஸ்மாக் கடைகளுக்கான மின் கட்டணத்தை, டாஸ்மாக் நிர்வாகம் முழுமையாக தருவதில்லை. சரக்குகளை கையாளும் போது உடையும் பாட்டில்களுக்கான (ஹேண்ட்லிங் லாஸ்) மொத்த தொகையையும், டாஸ்மாக் பணியாளர்கள் தான் செலுத்த வேண்டியுள்ளது. தமிழக அரசு, டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தினாலும், அது போதுமானதாக இல்லை. இதுபோன்ற காரணங்களால் சரக்குகளை கூடுதல் விலைக்கு விற்க வேண்டியுள்ளது. டாஸ்மாக் பார்கள் நேர வரையறையுடன் இயங்குவதற்கு, போலீசார் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றார்.''தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விழாக் காலங்களில், 'ஹாட்' வகைகள் பல விற்பனைக்கு இருந்தாலும், குறிப்பிட்ட வகை மட்டுமே இருப்பதாக, டாஸ்மாக் விற்பனையாளர்கள் கூறுகின்றனர். இதன் மூலம், அக்குறிப்பிட்ட ரகத்தின் மீது, போலியான பற்றாக்குறையை உருவாக்கி, கூடுதல் விலைக்கு விற்கும் முறைகேடும் தொடர்ந்து நடக்கிறது'' என, 'குடிமகன்'கள் புலம்புகின்றனர்.நமது சிறப்பு நிருபர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ