ஒழுங்கு நடவடிக்கை கால வரம்புகளில் திருத்தம்
சென்னை: பணி நீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களின் ஒழுங்கு நடவடிக்கைகளை, இறுதி செய்வதற்கான கால வரம்புகளில் திருத்தம் செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன் விபரம்: பணி நீக்கம் செய்யப்பட்டவரிடம் விளக்கம் பெறப்பட்டதிலிருந்து, விசாரணை அதிகாரியை நியமிக்க ஏழு நாட்கள் அவகாசம் இருந்த நிலையில், தற்போது 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரி அறிக்கை பெற்ற பின், ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி முடிவு எடுக்க, லஞ்ச ஒழிப்புத்துறை அல்லாத வழக்காக இருந்தால், 20 நாட்கள், லஞ்ச ஒழிப்புத்துறை வழக்காக இருந்தால், 80 நாட்கள் கால வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லஞ்ச தடுப்பு இயக்குநரகம் விசாரணையை ஓராண்டுக்குள் நிறைவு செய்து, ஆணையரகத்திற்கு அறிக்கை அனுப்ப வேண்டும். தீர்ப்பாயமும் விசாரணையை ஓராண்டுக்குள் நிறைவு செய்ய வேண்டும். அதன் முடிவுகளை, தலைமைச் செயலகத்தில் உள்ள, துறை தலைமைக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.