அன்னிபெசன்ட் அம்மையார்
அன்னி பெசன்ட் அம்மையார் இந்தியா முழுவதும் பிரபலமானவர். காங்கிரஸ் தலைவராக இருந்தவர். ஆனால், அவருக்கும் சென்னைக்கும் உள்ள தொடர்பு என்றும் மறக்க இயலாது.ஆரம்ப காலத்தில் அடையாற்றின் தெற்குக் கரையில் தியோசோபிகல் சொசைட்டி 27 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டது. பின்னர் 270 ஏக்கர் நிலப்பரப்பானதாக ஆக்கிய இந்த இடத்தில் அனைத்து மதத்தினரும் தொழும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.400க்கும் மேற்பட்ட வயதுடைய அடையாறு ஆலமரமும் இந்த இடத்தில் தான் உள்ளது. இந்த மரத்தின் கீழ் தான் காங்கிரஸ் என்ற அமைப்பை உருவாக்கும் எண்ணம் ஆக்டேவியன் ஹூயூம் என்பவரால் முன்மொழியப்பட்டது. மேலும் தியோசோபிகல் சொசைட்டியில் உள்ள புத்தர் சிலை 800 ஆண்டுகள் பழமையானது.அன்னி பெசன்ட் 1847ல் லண்டனில் பிறந்திருந்தால் கூட, அவர் சென்னையில் நீண்ட காலம் இருந்தார். தியோசோபிகல் சொசைட்டியை ஆரம்பித்த எம்.பி.பிளாவட்ஸ்கியின் அறிமுகம் இவருக்கு கிடைத்தது. அன்னி பெசன்ட் அம்மையாரும் தியோசோபிகல் சொசைட்டியில் உறுப்பினராகச் சேர்ந்தார். இதன் சார்பாக 1893ல் இந்தியா வந்தார். இங்கு வந்த பிறகு அவருக்கு தியோசோபிகல் சொசைட்டி மட்டுமின்றி இந்திய சுதந்திர போராட்டத்திலும் ஆர்வம் ஏற்பட்டது.சார்லஸ் வெப்ஸ்டர் லெட்பீட்டர் என்பவருடன் சேர்ந்து சொசைட்டியில் சேவை செய்ய ஆரம்பித்தார். இவர் மூலமாகத்தான் ஜே.கிருஷ்ணமூர்த்தி அறிமுகபடுத்தப்பட்டு பிற்காலத்தில் சிறந்த தத்துவமேதையாக உலகத்தால் அறியப்பட்டார். ஆரம்ப காலத்தில் அம்மையாருக்கு எதிர்ப்பு இருந்தது. பாரதியார் கூட இவரின் கருத்துக்களை ஒப்புக்கொள்ளவில்லை.அன்னி பெசன்ட் அம்மையாரின் ஹோம் ரூல் இயக்கம், காங்கிரசின் கொள்கையை ஒத்திருந்தது. அவரது சிறைவாசம் ஹோம்ரூல் இயக்கத்தை பிரபலமாக்கிவிட்டது. கல்கத்தாவில் நடந்த 1917ம் ஆண்டு காங்கிரஸ் மாநாட்டின், தலைவராக அன்னி பெசன்ட் அம்மையார் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1933ல் இவர் காலமானார்.