அரசியல் துணிவிருந்தால் எதையும் சாதிக்க முடியும்: சொல்கிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ''அரசியல் துணிவிருந்தால் எதையும் சாதிக்க முடியும்,'' என, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.சென்னையை அடுத்த காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலையின் 21வது பட்டமளிப்பு விழாவில், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி, அவர் பேசியதாவது: நாட்டின் உயரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாக எஸ்.ஆர்.எம்., பல்கலை திகழ்கிறது. மாணவர்கள் தான் இந்தியாவின் எதிர்காலம். இளைஞர் சக்தி தான் இந்தியாவின் பலம். அதனால், பட்டம் பெற்றவர்களின் பொறுப்புணர்வும் அதிகரிக்கிறது. உலகிலேயே இளைஞர் சக்தியில், பொறியியல் திறனில், மனிதவளத்தில் இந்திய இளைஞர்கள் முதலிடத்தில் உள்ளனர். உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் இந்தியர்கள் உள்ளனர். வளர்ந்த பொருளாதாரம் சுயசார்பு இந்தியாவும், வளர்ந்த இந்தியாவும் தான் நம் லட்சியம். இந்தியாவை உலகின் முதல் பொருளாதார நாடாக்க வேண்டும் என்ற இலக்குடன் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். 'ஸ்டார்ட் அப்' துறைகளில் இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது. அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட எந்த துறையாக இருந்தாலும், ஆராய்ச்சி மிக மிக முக்கியம். ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை சார்ந்துள்ளது. பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. 1995 முதல் 2000ம் ஆண்டு வரை, மஹாராஷ்டிராவில் நான் பொதுப்பணி துறை அமைச்சராக இருந்த போது, 55 மேம்பாலங்கள் கட்டப்பட்டன. மும்பை -- புனே விரைவுச்சாலை அமைக்க, மூன்று 'டெண்டர்'கள் வந்திருந்தன. அவற்றில், ரிலையன்ஸ் நிறுவனம் 36,000 கோடி ரூபாயில் முடிக்க முன்வந்தது. ஆனால், அரசின் மதிப்பீடு, 18,000 கோடி ரூபாய் மட்டுமே. எனவே, அந்த டெண்டரை ரத்து செய்துவிட்டு, மஹாராஷ்டிரா அரசின் சார்பில், குறைந்த செலவில் மும்பை -- புனே விரைவுச்சாலை அமைக்கும் பணியை முடித்தோம். அரசியல் துணிவிருந்தால் எதையும் சாதிக்க முடியும்.மோடி பிரதமராக பொறுப்பேற்ற போது, ஆட்டோமொபைல் துறையில் இந்தியா ஏழாவது இடத்தில் இருந்தது. இப்போது அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து மூன்றாவது பெரிய நாடாக வளர்ந்துள்ளது. அதிகமான ஜி.எஸ்.டி., வருவாயை இத்துறை அளிக்கிறது; அதிகமான வேலைவாய்ப்பையும் உருவாக்குகிறது. எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வது, இப்போது மிகப்பெரிய சவாலாக உள்ளது. 22 லட்சம் கோடி ரூபாய்க்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறோம். அதுபோல விவசாயமும் மிக மிக முக்கியம்.இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் உற்பத்தி துறை 22 முதல் 24 சதவீதமும், சேவை துறை 52 முதல் 54 சதவீதமும், விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகள் 12 சதவீதமும் பங்களிக்கின்றன. ஆராய்ச்சி தேவை இதை கருத்தில் வைத்து, எரிசக்தி, விவசாய துறையில் நாம் அதிக வளர்ச்சி அடைய வேண்டும். எரிசக்தி துறையின் எதிர்காலம் ஹைட்ரஜன் தான். கழிவு பொருட்களை பயன்படுத்தி சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதனால், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும். இத்துறைகளில் ஆராய்ச்சி அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.எஸ்.ஆர்.எம்., பல்கலை நிறுவனர் மற்றும் வேந்தர் பாரிவேந்தர், ஆமதாபாத் ஐ.ஐ.எம்., இயக்குநர் பரத் பாஸ்கர் உள்ளிட்டோர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றனர்.