டி.டி., மருத்துவக் கல்லூரியில் செய்முறை தேர்வு நடத்த ஒப்புதல் : முடிவுக்கு வந்தது வழக்கு
சென்னை : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள டி.டி., மருத்துவக் கல்லூரியில், தேர்வு மற்றும் செய்முறை தேர்வுகளை நடத்துவதாக, சென்னை ஐகோர்ட்டில் எம்.ஜி.ஆர்., பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, துணைவேந்தர், தேர்வு கட்டுப்பாட்டாளர் மீதான கோர்ட் அவமதிப்பு வழக்கு முடிக்கப்பட்டது. டி.டி., மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தேர்வு எழுத, எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக்கழகம் 'ஹால் டிக்கெட்' வழங்கவில்லை. இதையடுத்து, ஐகோர்ட்டில் மாணவர்கள் மனுக்கள் தாக்கல் செய்தனர். முதல் ஆண்டு தேர்வு எழுத மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக்கு, ஐகோர்ட் உத்தரவிட்டது.
தேர்வு எழுத, டி.டி., மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் காத்திருந்தனர். பல்கலை தரப்பில் அதிகாரிகள் யாரும் வரவில்லை. அதைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆர்., பல்கலை வளாகத்தில் தேர்வு எழுத வேண்டும் என மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. சில தேர்வுகளை மாணவர்கள் எழுதினர்; சிலவற்றை எழுதவில்லை.
இந்நிலையில், எம்.ஜி.ஆர்., பல்கலை துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன், தேர்வு கட்டுப்பாட்டாளர் டாக்டர் சிவ சங்கீதாவுக்கு எதிராக கோர்ட் அவமதிப்பு மனுக்கள், டி.டி., மருத்துவக் கல்லூரி தரப்பிலும், மாணவர்கள் தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை நீதிபதி என்.பால்வசந்தகுமார் விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் ஜி.சங்கரன், தாட்சாயிணி ரெட்டி ஆஜராகினர்.
எம்.ஜி.ஆர்., பல்கலை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு: பல்கலைக் கழக வளாகத்தில் தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 1, 2ம் தேதிகளில் மாணவர்கள் யாரும் தேர்வு எழுத வரவில்லை. 3ம் தேதி, இரண்டு மாணவர்கள் தான் வந்தனர். 4, 5ம் தேதிகளில் 149 மாணவர்களும், 8ம் தேதி 150 பேரும் தேர்வு எழுதினர். மாணவர்களின் நலன் கருதி, வரும் 22 முதல் 27ம் தேதி வரை, செய்முறை தேர்வுகளை மனுதாரர் கல்லூரியிலேயே நடத்துவது என, பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது. முதல் மூன்று பாடங்களை பெரும்பான்மையான மாணவர்கள் எழுதாததால், வரும் 29, 30, செப்டம்பர் 2ம் தேதிகளில் மனுதாரர் கல்லூரியில் தேர்வுகளை நடத்த, துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர்., பல்கலை தரப்பில் அளிக்கப்பட்ட பதில் மனுவை பதிவு செய்து கொண்டு, துணைவேந்தர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டாளர் மீதான கோர்ட் அவமதிப்பு மனுவை முடித்து வைப்பதாக, நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டார்.