கைது செய்யப்பட்டது ஏன்?
சென்னை: த.வெ.க., – எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டது குறித்து காவல் துறை அளித்த விளக்கம்: கடந்த 23ம் தேதி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த பெண் அதிகாரி, எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ் மீது, துன்புறுத்தல், முறையற்ற நடத்தை தொடர்பாக புகார் அளித்தார். அதன் அடிப்படையில், அதேநாளில், கள்ளக்குறிச்சி மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடக்கத்தில், உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தினர். சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவின்படி, திருப்பூர் மாவட்ட எஸ்.பி., சிருஷ்டிசிங், சென்னை நிர்வாக பிரிவு ஐ.ஜி., காமினி ஆகியோர் இவ்வழக்கின் விசாரணையை மேற்கொண்டனர். புகார்தாரர் மற்றும் பிற சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது; அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில், கள்ளக்குறிச்சி போலீசார், தமிழக சைபர் குற்றத்தடுப்பு போலீசார் இணைந்து, 201 சமூக வலைதள பதிவுகளை நீக்கியுள்ளனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக எந்தவொரு தகவலையும் பொதுவெளியில் வெளியிடவோ, பகிரவோ அல்லது பரப்பவோ கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதால், அதற்கு முரணாக பதிவுகள் வெளியிடுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.