உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கலைக்கு எல்லை என்பதே இல்லை... போர்ச்சுகல் பயணிக்கும் திருப்பூர் எழுத்தாளர்

கலைக்கு எல்லை என்பதே இல்லை... போர்ச்சுகல் பயணிக்கும் திருப்பூர் எழுத்தாளர்

இயல், இசை, நாடகக்கலையில், சினிமாவுக்கென்று தனியிடம் உண்டு; வெள்ளித்திரையில் மின்னும் நடிகர்களுக்கென, தனி ரசிகர் பட்டாளமே உண்டு.வெறும் ரசிப்புத்தன்மை என்ற நிலையை கடந்து, பன்மொழி சினிமாக்களை கண்டு ரசித்து, அதில் நிரம்பியுள்ள நடிப்புக்கலை, படப்பிடிப்பின் நுணுக்கம், ஒளிப்பதிவின் நேர்த்தி, திரை வடிவம் என, ஒவ்வொரு விஷயத்தையும் ஆழ நேசிக்கும் ரசிகர் கூட்டம், உலகம் முழுக்க பரவி இருக்கிறார்கள்.உலகின் பல்வேறு நாடுகளில், தொடர்ந்து நடக்கும் திரைப்பட விழாக்களில், இனம், மொழி மறந்து, 'கலை' என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் மையமாக வைத்து, எல்லை கடந்து பயணிக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள், படைப்பாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள், கலை பயணத்துக்குள் சங்கமிக்கின்றனர்.அந்த வகையில், வரும் ஜூலை மாதம், போர்ச்சுக்கல் நாட்டில் நடக்கும் திரைப்பட விழாவில் நடுவராக பங்கேற்கும் வாய்ப்பு, திருப்பூரைச் சேர்ந்த எழுத்தாளர் சுப்ரபாரதி மணியனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.இது குறித்து, அவர் கூறியதாவது:கடந்த, 30 ஆண்டாக, 'கனவு' என்ற பெயரில், திரைப்பட சங்கம் நடத்தி வருகிறேன். இந்த சங்கம் தென்னிந்திய திரைப்பட சங்க கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ளது; இந்த கூட்டமைப்பில் பிராந்தியக்குழு உறுப்பினராக உள்ளேன்.திரைப்பட விழாவில் பல்வேறு மொழி படங்கள் திரையிடப்படும்; அவற்றை பார்த்து, நடுவராக அதில் சிறந்தவற்றை தேர்வு செய்வதன் வாயிலாக, உலகளாவிய சினிமாவின் தரம், அது சமுதாயத்தில் ஏற்படுத்த போகும் மாற்றங்களை அறிந்து கொள்ள முடியும். புதிதாக வரும் படைப்பாளிகளுக்கு அந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை