பஞ்சாபில் நடந்த கபடி போட்டியில் தமிழக வீராங்கனையர் மீது தாக்குதல்
சண்டிகர்:பஞ்சாபில் நடந்த கபடி போட்டியில், தமிழக - பீஹார் அணியினர் இடையே ஏற்பட்ட மோதலின் போது, தமிழக வீராங்கனையர் தாக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.பல்கலைகளுக்கு இடையேயான, 2024 - 25ம் ஆண்டு கபடி போட்டிகள் பஞ்சாபில் நடந்து வருகின்றன. பரபரப்பு
இதில், பங்கேற்க தமிழகத்தில் இருந்து அன்னை தெரசா, அழகப்பா, பாரதியார் உள்ளிட்ட பல்கலைகளில் இருந்து, 30க்கும் மேற்பட்ட வீராங்கனையர் சென்றனர். பதிண்டா மாவட்டத்தில் உள்ள குரு காசி பல்கலையில் நடந்த போட்டியில், தமிழகம் மற்றும் பீஹார் அணிகள் மோதின. தமிழகத்தின் கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா பல்கலை மற்றும் பீஹாரின் தர்பங்கா பல்கலை மாணவியருக்கு இடையே கபடி போட்டி நடந்தது. அப்போது, பீஹார் வீராங்கனையின், 'பவுல் பிளே' தொடர்பாக, தமிழக வீராங்கனை ஒருவர் நடுவரிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, தமிழக வீராங்கனையை நடுவர் தாக்கியதாக கூறப்படுகிறது. வீராங்கனைக்கு ஆதரவாக தமிழக அணியினர் திரண்டனர். இந்த தருணத்தில், பீஹார் அணியைச் சேர்ந்த வீராங்கனையரும், தமிழக மாணவியரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த நாற்காலி உள்ளிட்ட பொருட்களை துாக்கி வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, பிற அணியினரின் சமரசத்தால் மோதல் தடுக்கப்பட்டது.இதுகுறித்து போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வரும் சூழலில், தமிழக வீராங்கனையை நடுவர் தாக்கியதாலேயே இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததாக கூறப்படுகிறது. சமாதான பேச்சு
மாணவியர் மோதல் தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, பஞ்சாபில் உள்ள தமிழக மாணவியரை பத்திரமாக அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.அத்துடன், தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆகியோர், சம்பவம் நடந்த மாவட்டத்தின் கலெக்டர் மற்றும் எஸ்.பி.,யை தொடர்பு கொண்டு, தமிழக வீராங்கனையருக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தினர். இதுபற்றி, துணை முதல்வர் உதயநிதி கூறியதாவது:கபடி விளையாட்டின் போது, ஒரு, 'பாயின்ட்' எடுப்பதில், இரு அணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின், அது கைகலப்பானது. இதில், யாருக்கும் காயம் இல்லை. தாக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. வீராங்கனையர் தற்போது படிக்கும் மாணவியர் என்பதால், ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்தால், அவர்களின் படிப்பு பாதிக்கப்படும். எனவே, இருவருக்கும் இடையே சமாதான பேச்சு நடத்தி, வழக்கு ஏதும் பதியவில்லை.தமிழக வீராங்கனையரும், பயிற்சியாளர் கலையரசியும் பாதுகாப்பாக டில்லி அழைத்து செல்லப்பட்டு, தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அவர்கள், அங்கிருந்து தமிழகம் திரும்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விளையாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது இயல்பு. எனினும், இனி இதுபோன்று நிகழாதவாறு, பாதுகாப்பு விஷயங்களை பலப்படுத்துவோம்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையில், தமிழக வீராங்கனையர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, பா.ம.க., தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.