தேர்வாகும் ஆசிரியர்களின் பின்னணி சரிபார்ப்பு; ஐகோர்ட்டில் அரசு அட்வகேட் ஜெனரல் உறுதி
சென்னை: ஆசிரியர்கள் நியமனத்தின் போது, அவர்களின் பின்னணியை சரிபார்ப்பது குறித்து, அரசு தேவையான முடிவெடுக்கும்; அதற்காக உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் அட்வகேட் ஜெனரல் உறுதி அளித்தார்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் பணியிடங்களில் நியமிக்கப்பட வேண்டும் என்றால், தகுதி தேர்வு தேர்ச்சி கட்டாயம். சி.பி.ஐ., விசாரணை
தகுதித் தேர்வில் தேர்ச்சியானவர்கள் மத்தியில் இருந்து, போட்டித் தேர்வு வாயிலாக, தேர்வு செய்யும் வகையில், கடந்த 2018ல் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு, நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி அடங்கிய அமர்வில், நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. பதில் மனு தாக்கல் செய்ய, அரசுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆசிரியர்கள் நியமனத்தின் போது, அவர்களின் பின்னணியை ஏன் சரிபார்க்கக் கூடாது; ஆசிரியர்களாக தேர்வு செய்யப்படுவோருக்கு எதிராக, வழக்குகள் உள்ளனவா என்பது குறித்து, போலீஸ் வாயிலாக ஏன் விசாரிக்க கூடாது; இதுகுறித்து, அரசு முடிவெடுக்க வேண்டும் என, அறிவுறுத்தி இருந்தனர்.இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், போலி என்.சி.சி., முகாமில், மாணவியருக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில், சி.பி.ஐ., விசாரணை கோரி, வழக்கறிஞர் சூரியபிரகாசம் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் கிருஷ்ணகுமார், பாலாஜி அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர்கள் மற்றும் இதர பணியிடங்களில் நியமிக்கும்போது, அவர்களின் பின்னணியை கருத்தில் கொள்வதாகவும், மற்ற துறைகளில் நியமனத்தின்போது, குற்ற வழக்குகளில் தொடர்பு உள்ளதா என்பதை சரிபார்க்கும் நடைமுறையை, இதிலும் பின்பற்றுவதாகவும் தெரிவித்தார். மேலும், இதுகுறித்து அரசு தேவையான முடிவெடுத்து, உரிய உத்தரவுகளை பிறப்பித்து, அடுத்த விசாரணையின் போது தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார்.போலி என்.சி.சி., முகாம் வழக்கில், கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: புகார் பெட்டி
பாதிக்கப்பட்ட மாணவியர், பெற்றோர், ஆசிரியர்கள் உடன் கலந்தாய்வு நடத்தி, ஆய்வு மேற்கொண்டு, கூடுதல் மாவட்ட நீதிபதி அறிக்கை அளித்துள்ளார். அந்த நீதிபதி, சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டாலும், மீண்டும் அந்த பள்ளிகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மாணவியரிடம் மேலும் தகவல்களை சேகரிக்க வேண்டும்.இரண்டு பள்ளிகளுக்கு, தனி அதிகாரி நியமனம் முடிந்து விட்டது. இரண்டு பள்ளிகளைப் பொறுத்தவரை, விசாரணை முடிந்து, ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிப்பதாகவும், அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மாணவர்களின் நலனை உறுதி செய்ய, ஆலோசனைக் குழுவை நியமித்திருப்பதாகவும், அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டிகளை வைக்க உத்தரவிட்டிருப்பதாகவும், அட்வகேட் ஜெனரல் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க, மாவட்ட அளவில் அதிகாரிகளை நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், இது குறித்து ஒரு வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிப்பதாகவும், அட்வகேட் ஜெனரல் தெரிவித்து உள்ளார்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.இதையடுத்து, விசாரணையை, வரும் 20க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.