ரயில்வே யூனியன் தேர்தல் சுவர் விளம்பரத்திற்கு தடை
சென்னை: 'ரயில்வே தொழிற்சங்க தேர்தல் தொடர்பாக, ரயில் நிலையங்களின் சுவர்களில் தேர்தல் விளம்பரங்களை வரையக்கூடாது. பயணியருக்கு இடையூறு செய்யக்கூடாது' என, தொழிற் சங்கங்களை ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.ரயில்வேயில் முதல் முறையாக, 2007ல் தொழிற்சங்க அங்கீகார தேர்தல் நடந்தது. கடந்த, 2013ல் நடந்த தேர்தலில், எஸ்.ஆர்.எம்.யு., 43 சதவீத ஓட்டுகளை பெற்று, அங்கீகார தொழிற்சங்கமாக தேர்வு செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பு உள்ளிட்ட சில காரணங்களால், 2019க்கு பின், தொழிற்சங்க அங்கீகார தேர்தல் நடக்கவில்லை. தற்போது டிசம்பர், 4, 5, 6ம் தேதிகளில் தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ரயில்வேயில் உள்ள, 17 மண்டலங்களிலும் பணியாற்றும், 12.20 லட்சம் ஊழியர்களின் ஆதரவை பெற, ரயில்வே தொழிற்சங்கங்கள் தங்கள் பிரசாரங்களை துவங்கி உள்ளன. ரயில்வே அலுவலகங்கள், தொழிற்சாலைகள், குடியிருப்பு பகுதிகளில், தொழிற்சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து, ஆதரவு திரட்டி வருகின்றனர். அதேநேரத்தில், தேர்தல் தொடர்பாக, சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, ரயில்வே சார்பில் தொழிற்சங்கங்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுபற்றி, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல், விரைவில் நடைபெற உள்ளது. அனைத்து தொழிற்சங்கங்களும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். குறிப்பாக, ரயில் நிலையங்களின் சுவர்களில் விளம்பரங்கள் வரையக்கூடாது; போஸ்டர்கள் ஒட்டக்கூடாது. எம்.பி.,க்களை அழைத்து பிரசாரத்தில் பேசக்கூடாது. பயணியருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், நிலையங்களுக்கு முன், போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தக்கூடாது. இந்த விதிகளை தொழிற்சங்கங்கள் மீறினால், தேர்தல் நடத்தை விதிமீறலாக கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.