விவசாயிகளுக்கு துரோகம்
புதுக்கோட்டை:புதுக்கோட்டையில், காவிரி, வைகை, குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் மாநில தலைவர் மாரிமுத்து கூறியதாவது: கடந்த நான்கு ஆண்டுகளை போலவே, இந்த ஆண்டும் வேளாண் பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது. வேளாண் துறையில் உள்ள அடிப்படை பிரச்னைகளையும், விவசாயிகள் அன்றாடம் சந்திக்கிற பிரச்னைகளையும், தமிழக அரசு கவனத்தில் கொள்ளவில்லை.விவசாயத் துறையில் அரசின் பொது முதலீடு அதிகரிக்க வேண்டும். மாநில நதி நீர் இணைப்பு திட்டங்கள், நீர்நிலை கட்டமைப்புகளை வலுப்படுத்தி, நீர்ப்பாசன திட்டங்களை விரிவுபடுத்தி சாகுபடி பரப்பளவை அதிகரிக்க வேண்டும்.இது தான், உணவு தானிய உற்பத்தி பெருக முதன்மை காரணியாகும். அடுத்ததாக, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். வேளாண்மை துறையில் அரசின் பிடிமானத்தை விட தனியார் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மேலாதிக்கம் செலுத்துகின்றன.தி.மு.க., 2021 தேர்தல் அறிக்கையில், அளித்த வேளாண்மை சம்பந்தப்பட்ட பெரும்பகுதி வாக்குறுதிகள் ஐந்து நிதிநிலை அறிக்கைகளிலும் நிறைவேற்றப்படவில்லை. தி.மு.க., அரசு பச்சைத்துண்டுகளை அணிந்து கொண்டு விவசாயிகளுக்கு பச்சைத் துரோகம் செய்து விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.