கோவை ஏர்போர்ட்டில் மோதல் காங்., தேசிய செயலர் மீது வழக்கு
கோவை: காங்., தேசிய பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால், கடந்த 17ல், கேரள மாநிலத்தில் இருந்து மும்பை செல்வதற்காக, கோவை விமான நிலையம் வந்தார். அப்போது அவரை சந்திக்க காங்., நிர்வாகிகள் சென்றனர்.கோவை வந்த வேணுகோபாலை சந்தித்த கட்சியினர், ஒருவர் மீது மற்றொருவர் புகார் அளித்தனர். அப்போது, ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்க மாநில பொதுச்செயலரான செல்வம், காங்., கட்சியின் தேசிய செயலரான மயூரா ஜெயக்குமார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை மயூரா ஜெயக்குமார் அடிக்க பாய்ந்தார்.இது தொடர்பாக செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் புகார் அளித்தனர்.இந்நிலையில், பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய குற்றங்களில் மயூரா ஜெயக்குமார், காங்., கோவை மாநகர் மாவட்ட பொதுச்செயலர் தமிழ்செல்வன் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீது, கோவை பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.