சென்னை: 'மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட மறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள், இரு கட்டங்களாக நடத்தப்பட உள்ளன. இதற்கான முன்னோட்டமாக, தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை, கிருஷ்ணகிரி மாவட்ட அஞ்செட்டி ஆகிய இரண்டு தாலுகாக்களிலும், காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சியிலும், மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் கடந்த நவம்பர் மாதம் நடந்தன. இந்த சூழலில், தமிழகத்தில் முதல் கட்டமாக, வரும் ஜூலை 16 முதல் ஆகஸ்ட், 30 வரை, வீட்டு பட்டியல் உருவாக்கும் செயலி வழியே, வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் துவக்கப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம், நாடு முழுதும் ஒரே கட்டமாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான அதிகாரிகள் நியமனம் தொடர்பாக, தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, மாவட்ட அளவில், கலெக்டரே, நகராட்சி நிர்வாக பகுதி தவிர்த்து, மற்ற பகுதிகளுக்கு, மாவட்ட முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரியாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வனத்துறை அதிகாரி, கூடுதல் முதன்மை கணக்கெடுப்பு அதிகாரியாகவும், மாவட்ட வருவாய் அதிகாரி, மாவட்ட கணக்கெடுப்பு அதிகாரியாகவும் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு அதிகாரிகள், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட உள்ளனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு 1948 சட்டத்தின்படி, எந்த ஒரு கணக்கெடுப்பு அதிகாரியும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடமைகளை செய்ய மறுத்தால், கடமையை செய்ய விடாமல் தடுத்தால், அவர்களுக்கு 1,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் வரை, சிறை தண்டனையும் விதிக்கப்படும் என, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.