உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திடக்கழிவு மேலாண்மைக்கு புதிய விதிமுறைகள் அக்., 1ல் அமல்படுத்த மத்திய அரசு முடிவு

திடக்கழிவு மேலாண்மைக்கு புதிய விதிமுறைகள் அக்., 1ல் அமல்படுத்த மத்திய அரசு முடிவு

சென்னை: திடக்கழிவு மேலாண்மைக்காக, 2016ல் வெளியிடப்பட்ட விதிகளை மேம்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளை, அக்., 1ல் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுதும் நகர்ப்புற வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில், திடக்கழிவு மேலாண்மை பெரிய சவாலாக உள்ளது. நகரங்களில் உருவாகும் திடக்கழிவு, அருகில் உள்ள காலியான நிலங்கள், நீர்நிலைகள் போன்றவற்றில் கொட்டப்படுகின்றன. ஒரு கட்டத்தில் இடப்பற்றாக்குறை ஏற்படும் நிலையில், குப்பை ஆங்காங்கே எரிக்கப்படுகிறது. திடக்கழிவுகளில் பிளாஸ்டிக் போன்ற பொருட்களை சேர்த்து எரிக்கும்போது, சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. பல இடங்களில், தொழிற்சாலை, மருத்துவமனை கழிவுகளும் சேருவதால் பாதிப்பு அதிகமாகிறது. இதை கருத்தில் வைத்து, 2016ல் திடக்கழிவு மேலாண்மை விதிகளை மத்திய அரசு அறிவித்தது. தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் அதை ஏற்றன. இதன்படி, மாவட்ட அளவில் துணை விதிகள் வகுக்கப்பட்டு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், இந்த விதிகளை அமல்படுத்தி வருகின்றன. திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக, பல்வேறு புதிய பிரச்னைகள் அதிகரித்துள்ள நிலையில், 2016ல் பிறப்பிக்கப்பட்ட விதிகளில் மாற்றங்கள் செய்ய வேண்டிய தேவை எழுந்தது. இதை கருத்தில் வைத்து, 'திடக்கழிவு மேலாண்மை விதிகள் - 2024' வரைவு ஆவணத்தை, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை தயாரித்தது. இது தொடர்பாக, பொதுமக்கள், அரசு துறைகள், தனியார் அமைப்புகள், வல்லுநர்களிடம் கருத்து கேட்பு பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. அதனால், புதிய விதிமுறைகளை, வரும் அக்., 1ல் அமல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இது குறித்து தமிழக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'திடக்கழிவு மேலாண்மை தொடர்பான புதிய விதிகளில், பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 'விதிமுறைகள் அமலுக்கு வந்ததும், அதை தமிழகத்தில் எப்படி அமல்படுத்தலாம் என்று ஆலோசித்து வருகிறோம்' என்றார்.

புதிய விதிமுறைகள்

மத்திய அரசு தயாரித்துள்ள, திடக்கழிவு மேலாண்மைக்கான புதிய விதிகளில் இடம்பெற்றுள்ள அம்சங்கள்: இந்த விதிமுறைகளின் அதிகார வரம்பில், ஊராட்சிகளும் கொண்டு வரப்படுகின்றன. இதுவரை மக்கும், மட்காத குப்பை, வீட்டு கழிவுகள் என இருக்கும் வகைபாடு, இனி ஈரக் கழிவுகள், காய்ந்த கழிவுகள், சுகாதார கழிவுகள், சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய கழிவுகள் என, நான்கு தலைப்பில் வகைப்படுத்தப்படும்.சாலையோர வியாபாரிகளுக்காக இருந்த தனிப்பிரிவு நீக்கப்படுகிறது. அவர்கள் வணிக நிறுவனங்கள் பிரிவில் இடம்பெறுவர். தோட்டக்கலை, விவசாய கழிவுகள் மேலாண்மைக்கு, தனி வழிமுறை சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், குடியிருப்பு வளாகங்களில் சேரும் இலை, தழைகள், மரம் வெட்டுவதால் ஏற்படும் கழிவுகளை அப்புறப்படுத்த வழிபிறக்கும். விவசாயத்தில் ஏற்படும் கழிவுகள் கணக்கிடப்பட்டு, அதை அழிப்பதற்கும், உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக கட்டணம் வசூலிக்கப்படும். ஒரு நாளுக்குள், 100 கிலோவுக்கு மேல் குப்பை உற்பத்தி செய்யும் வளாகங்கள், 'பல்க் வேஸ்ட் ஜெனரேட்டர்களாக', அதாவது அதிக கழிவு உற்பத்தியாளராக வகைபடுத்தப்படுவர், குப்பையை தரம்பிரித்து அழிக்கும் பணிக்கு, மூன்றாவது நபராக வேறு நிறுவனங்களை, உள்ளாட்சிகள் பரிந்துரை அடிப்படையில் பயன்படுத்த அனுமதிக்கலாம். அதிக திடக்கழிவு உற்பத்தியாளர்களை, முறையாக பதிவு செய்து கண்காணிக்க, 'ஆன்லைன்' வசதி ஏற்படுத்தப்படும் ஊரகப் பகுதிகளில் குப்பையை பயன்படுத்தி, எரிவாயு போன்ற பொருட்கள் உற்பத்தி செய்வோருக்கு, புதிய சலுகைகள் வழங்கப்படும், இதில் தயாரிக்கப்படும் உரத்தை விற்க, மத்திய அரசு துறைகள் வாயிலாக உதவி வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

GMM
ஏப் 07, 2025 08:38

திட , திரவ கழிவு மோலாண்மை அவசியம். முன்பு வீட்டில் திரவம் சேகரிக்க ஊறல் பானை. மாட்டிக்கு நீரை தருவர் . அடுப்பில் மிச்சும் திட சாம்பல் உரம். தற்போதும் வீட்டில், மண்டபம், ஓட்டல்கள் போன்றவற்றில் திரவ, திட பொருள்கள் சேகரிக்க இடம் கட்டாயம். இதனை கட்டணம் அடிப்படையில் வரி வசூல் செய்யும் உள்ளாட்சி அமைப்புகள் சேகரிக்க வேண்டும். ஒவ்வொரு தெருவிலும் காலி இடம் இருக்கும். அக்கிரமிக்கப்பட்டு இருக்கும் . அகற்றி அங்கு கழிப்பிடம் கட்ட வேண்டும். நகராட்சியில் பள்ளிகள், மருத்துவ மனை . மண்டபம் தேவையில்லை. பஸ் நிலையம் பராமரிப்பு போக்குவரத்துக்கு துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.


Kasimani Baskaran
ஏப் 07, 2025 03:53

கூவம் திரவக்கழிவுதான் ஆகவே ஒரு நடவடிக்கையும் தேவையில்லை - திராவிட நிலைப்பாடு...


முக்கிய வீடியோ