உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதே திரைக்கதை... அதே வசனம்... போலி விவரம் தந்து ஏமாற்றுவதா? தி.மு.க., அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

அதே திரைக்கதை... அதே வசனம்... போலி விவரம் தந்து ஏமாற்றுவதா? தி.மு.க., அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திராவிட மாடல் ஏமாற்று அரசு அணிந்திருக்கும் சமூகநீதி முகமூடியை கிழித்து, அதன் சமூகநீதி மோசடிகளை பா.ம.க., அம்பலப்படுத்தும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் காட்டமாக தெரிவித்துள்ளார்.

மோசடி

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமூகத்திற்கும் எவ்வளவு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்கிறது என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட விவரங்களுக்கு, இரு மாதங்களுக்கு முன் இன்னொருவருக்கு வழங்கப்பட்ட அரைகுறையான, மோசடியான விவரங்களை வழங்கி தி.மு.க., அரசு ஏமாற்றியிருக்கிறது. ஆதாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லாமலேயே வன்னியர்களுக்கு 10.50%க்கும் கூடுதலான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு விட்டது போன்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்த தி.மு.க., அரசு முயன்றது இதன்மூலம் உறுதியாகியுள்ளது. தி.மு.க., அரசின் சமூக நீதி மோசடி கண்டிக்கத்தக்கது.தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 1989ம் ஆண்டு வரை ஒரே தொகுப்பாக பிணைக்கப்பட்டு, அவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. எனது தலைமையில் வன்னியர் சங்கத்தினர் பத்தாண்டுகளுக்கு தொடர்ந்து நடத்திய சமூகநீதிப் போராட்டத்தின் பயனாகவே 1989ம் ஆண்டில் 202 சாதிகளைக் கொண்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 50% இட ஒதுக்கீடு இரண்டாக பிரிக்கப்பட்டு, 107 சாதிகளைக் கொண்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய பிரிவு உருவாக்கப்பட்டு, அதற்கு 20% இட ஒதுக்கீடும், மீதமுள்ள 95 பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு 30% இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டன.

விபரம்

அதனால், தமிழகத்த்தில இட ஒதுக்கீட்டால் ஒவ்வொரு சமூகமும் எந்த அளவுக்கு பயனடைந்துள்ளது என்பதை அறிய வேண்டுமானால், 1989ம் ஆண்டு முதல் இன்று வரையிலான 35 ஆண்டுகளில் ஒவ்வொரு சமூகத்திற்கும் அவர்கள் சார்ந்த வகுப்பில் எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது? பொதுப்பிரிவில் எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது? என்ற விவரங்கள் தனித்தனியாக வெளியிடப் பட வேண்டும். இந்த விவரங்களை வெளியிட வேண்டும் என பல பத்தாண்டுகளாக பா.ம.க., வலியுறுத்தி வரும் போதிலும், சமூகநீதியில் தாங்கள் நடத்திய தில்லுமுல்லுகள் அம்பலமாகி விடும் என்பதற்காக தமிழகத்தை ஆட்சி செய்த எந்தக் கட்சியும் இந்த விவரங்களை வெளியிடாமல் மறைத்து வருகின்றன.

மடை மாற்றம்

இத்தகைய சூழலில் கடந்த ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50%க்கும் கூடுதலான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருப்பதாக ஒரு தகவலை தமிழக அரசு ஊடகங்களுக்கு கசிய விட்டது. அதில் எந்த புள்ளிவிவரமும் முழுமையாக இல்லை. வன்னியர்களைத் தவிர பிற சமூகங்களுக்கு கிடைத்த பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களும் இல்லை. சில புள்ளி விவரங்கள் பத்தாண்டுகளுக்கு வழங்கப்பட்ட நிலையில், சில விவரங்கள் ஓராண்டுக்கு மட்டும் வழங்கப்பட்டிருந்தன. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், அதை மடை மாற்றம் செய்யவே சில திரிக்கப்பட்ட புள்ளி விவரங்களை தமிழக அரசு திட்டமிட்டு வெளியிட்டது என்பதை அந்த விவரங்களை பார்த்த உடனேயே அறிய முடியும்.தமிழக அரசு வெளியிட்ட அந்த புள்ளி விவரங்கள் திரிக்கப்பட்டவை; அரைகுறையானவை என்று குற்றஞ்சாட்டிய நான், அதை ஏற்க முடியாது என்றும், அனைத்து சமூகங்களுக்குமான பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களை முழுமையாக வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தேன். இந்த நிலையில், கடலூரைச் சேர்ந்த எஸ்.பி.கோபிநாத் என்ற வழக்கறிஞர், தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர் சேர்க்கை, சட்டக்கல்லூரி மாணவர் சேர்க்கை ஆகியவற்றிலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் முதல் தொகுதி, இரண்டாம் தொகுதி, நான்காம் தொகுதி, ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் ஆகியவற்றிலும் 1989&ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு சமூகத்திற்கும் கிடைத்த பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி வழங்கும்படி பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்படோர் நலத்துறையிடம் விண்ணப்பித்திருந்தார்.

அம்பலம்

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி ஒருவர் என்னென்ன விவரங்களைக் கேட்கிறார்? என்பதை முழுமையாக அறிந்து கொண்டு அவர் கேட்கும் தகவல்களை துல்லியமாக வழங்க வேண்டியது அரசுத் துறைகளின் கடமை ஆகும். ஆனால், வக்கீல் கோபிநாத் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளிக்காத பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி ஊடகங்களுக்கு கசிய விடப்பட்ட புள்ளி விவரங்கள் அடங்கிய கடிதத்தையே பதிலாக வழங்கியுள்ளது. இதன் மூலம் திராவிட மாடல் அரசு நடத்தி வரும் சமூகநீதி மோசடிகளும், தில்லுமுல்லுகளும் அப்பட்டமாக அம்பலமாகியிருக்கின்றன.வக்கீல் கோபிநாத் எழுப்பிய வினாக்களின் அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர் சேர்க்கை, சட்டக்கல்லூரி மாணவர் சேர்க்கை ஆகியவற்றில் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட 31 விழுக்காட்டில் எந்தெந்த சமூகங்களுக்கு எவ்வளவு விழுக்காடு கிடைத்துள்ளது? பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 30 விழுக்காட்டில், அந்தப் பிரிவில் உள்ள எந்தெந்த சமூகங்களுக்கு எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது? 20% மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்கள் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு சமூகங்களுக்கும், சீர் மரபினருக்கும் எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது? என்ற விவரங்களை சாதிவாரியாக வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அந்த விவரங்களை வெளியிடாத தமிழக அரசு, வன்னியர்களை ஏமாற்றுவதற்காக திரிக்கப்பட்ட புள்ளிவிவரங்களையே மீண்டும் வெளியிட்டிருக்கிறது. அதே திரைக்கதை, அதே வசனத்தை எழுதி மக்களை ஏமாற்ற மீண்டும் அதே நாடகத்தை அரங்கேற்றியுள்ளது.

மறுப்பு

தமிழகத்தில் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்பட்டிருந்தால், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமூகத்திற்கும் கிடைத்த பிரதிநிதித்துவத்தின் விவரங்களை தமிழக அரசு வெளியிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை. அரசு நினைத்தால் அந்த விவரங்களை ஒரு வாரத்தில் திரட்டி விட முடியும். ஆனால், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து நிலைகளிலும் சமூகநீதி சூறையாடல்கள் நடப்பதால் தான் அவை குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிட மறுக்கிறது என்று தான் சந்தேகிக்கத் தோன்றுகிறது. மடியில் கனமில்லை என்றால் திராவிட மாடல் அரசுக்கு வழியில் பயம் தேவையில்லை. சில சமூகங்களுக்கு அவர்களின் மக்கள்தொகைக்கு அதிகமாகவும், வன்னியர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களுக்கு அவர்களின் மக்கள்தொகையை விட மிகவும் குறைவாகவும் பிரதிநிதித்துவம் இருப்பதால் தான் இந்த விவரங்களை தமிழக அரசு வெளியிட மறுக்கிறது என்பது இதிலிருந்து உறுதியாகியுள்ளது.

முகமூடி

வன்னிய மக்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த தி.மு.க., மீண்டும், மீண்டும் அந்த மக்களுக்கு துரோகங்களையும், சமூக அநீதியையும் தான் இழைத்து வருகிறது. அதனால் தான், வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதை தடுக்கும் வகையில் பொய்யான, திரிக்கப்பட்ட, அரைகுறையான புள்ளி விவரங்களை வெளியிட்டு, ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுத்து அதுகுறித்து பத்தி பத்தியாக செய்தி வெளியிடச் செய்த தமிழக அரசு, அனைத்து சமூகங்களுக்குமான 35 ஆண்டுகால புள்ளி விவரங்களை வெளியிட மறுக்கிறது. தங்களின் சமூகநீதி முகத்திரை கிழிந்து விடும் என்று அஞ்சுகிறது.சுப்ரீம் கோர்ட் அளித்தத் தீர்ப்பின் அடிப்படையில் உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை. மாறாக, பொம்மையான பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை கையில் வைத்துக் கொண்டு, திரிக்கப்பட்ட புள்ளி விவரங்களை வெளியிட்டு வன்னிய மக்களுக்கு சமூகநீதி வழங்காமல் ஏமாற்றி விடலாம் என்று தி.மு.க., அரசு நினைத்தால், அதை அனைத்து நிலைகளிலும் ஆதாரங்களுடன் பாட்டாளி மக்கள் கட்சி அம்பலப்படுத்தும். திராவிட மாடல் ஏமாற்று அரசு அணிந்திருக்கும் சமூகநீதி முகமூடியை கிழித்து அதன் சமூகநீதி மோசடிகளை அம்பலப்படுத்தும். மக்கள் மன்றத்தில் தி.மு.க.,வின் சமூகஅநீதிகளை தோலுரித்து சரியான பாடம் புகட்டப்படுவதை உறுதி செய்யும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

சாண்டில்யன்
அக் 06, 2024 22:40

ஒரு சாதிக்காக பேசப்போய் மற்ற அனைத்து சாதிகளின் வெறுப்பையும் அறுவடை செய்யலாம்


சாண்டில்யன்
அக் 06, 2024 22:38

நாமளே நம்ம சொந்த பந்தங்களிடம் விபரம் கேட்டு பெற்றிடலாமே அதுவே தங்களின் நம்பிக்கைக்குரியதாக இருக்கலாம்


Ramesh Sargam
அக் 06, 2024 21:58

திமுகவின் சமூகநீதி மோசடிகளை பா.ம.க., அம்பலப்படுத்தும். பா.ம.க., அம்பலப்படுத்தாவிட்டாலும் மக்களுக்கு நன்றாகவே தெரியும் திமுகவின் மோசடிகள்.


RAMAKRISHNAN NATESAN
அக் 06, 2024 21:13

சின்ன டவுசரை பாஜக கண்டுக்கலைன்னா திரும்ப டீம்காவுக்கு சலாமடிச்சு சனாதனம் ஒயிக ன்னு கோசம் போடுவோம் ......... இதுதான் பாமக ..........


raja
அக் 06, 2024 20:12

பொய் பித்தலாட்டம் ஏமாற்றுவது என்பது திமுக ஆரம்பித்த காலத்திலிருந்து அண்ணாவால் ஆரம்பித்து பின் கட்டுமரம் பின் அவரின் வாரிசுகள் என்று தொடர்ந்து தமிழனை ஏமாற்றும் கும்பலாகவே இந்த ஒன்கொள் கோவால் புற தெலுங்கர் கூட்டம் இருந்து வருகிறது... இவர்களை தமிழன் அடித்து விரட்டாதவரை தமிழன் உருப்பட மாட்டான்...


Krishnamurthy Venkatesan
அக் 06, 2024 20:02

பாவம் ஏழை பிராமணர்கள். ஏமாற்றப்படுகிறார்கள், வஞ்சிக்கப்படுகிறார்கள். ஒற்றுமை/ போராட்ட குணம் இல்லை. இதுதான் என் தலை விதி என்று இருக்கிறார்கள். அவர்களை இறைவன் காப்பாற்றட்டும்.


subramanian
அக் 06, 2024 19:10

திமுக சமூகநீதிக்கு எதிரான இயக்கம்.


sankaranarayanan
அக் 06, 2024 18:39

பச்சை தமிழர் காமாராஜரிடமிருந்து ஆட்சியை கைப்பற்ற அப்போது உங்களுக்கு மருந்துப்பொன்று தேவைப்பட்டது.இதே பிராமணர்கள் ராஜாஜி அவர்களின் துணைகொண்டுதான் அண்ணாவே ஆட்சியை பெற்றார்.இப்போது முதல்வர் பிரசாந்த் கிஷோர் என்ற பீஹார் பிராமணன் உதவி கொண்டு நானூரு கோடி செலவில் ஆட்சியை கைப்பற்றியுள்ளீர்கள்.ஆட்சிக்கு வந்ததும் நாற்காலியை எட்டி உதைப்பதுபோன்று ஆட்சிக்கு வர உதவிய இதே பிராமணர்களை கண்டால் வெறுப்பு,கண்டபடி பேசுவது எண்ணைய்யா இந்த மாயை.வினோதவெறுப்பு மனப்பான்மை.


GMM
அக் 06, 2024 18:36

சமூகத்தில் திருடன், போலீஸ் கலந்து இருப்பர். சமூக நீதி என்பது ஏமாற்று. தனி நபருக்கு தான் நீதி /நிதி வழங்க முடியும். திருமாவவன், ராமதாஸ் சமூகத்திற்கு அரசு அளவற்ற சலுகைகள் வழங்கி விட்டது. சலுகை பெற கட்சி வேண்டாம். ஒவ்வொரு கட்சியும் வியாபாரிகளை /நிறுவனங்களை வதைத்து வருகின்றன. தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றம் கட்சியை கட்டுபடுத்த சொன்னால் - உனக்கு வலி இருந்தால் எனக்கு என்ன - என்ற நிலைப்பாட்டில் இருக்கிறது? சட்டத்தில் சாதி இட ஒதுக்கீடு. அமுலில் சமூக ஒதுக்கீடு. நீதிமன்ற தீர்ப்பு வக்கீல் வாத அடிப்படையில் முடிவாகிறது. இது நீதி முறைக்கு ஆபத்து. சாதி வாரி வழங்கினால் பல சாதிகள் இட ஒதுக்கீடு மூலம் எந்த பயனும் பெற்று இருக்க மாட்டார்கள். காரணம், வாக்கு வங்கி யில்லை. இட ஒதுக்கீடு மூலம் வன்னியர் வாக்கு, மக்கள் தொகை அடிப்படையில் பிரதிநிதி என்ற குழப்பங்களை உருவாக்கி விட்டது. வரி மட்டும் உழைபவனுக்கு மட்டும். வலுத்தவனுக்கு இட ஒதுக்கீடு என்று கூறலாம். வன்னியர் MLA எத்தனை பேர்.? சமூக நீதிக்கு பிற சமூகத்திற்கு விட்டுக்கொடுக்க ஏன் மனமில்லை?


Pats, Kongunadu, Bharat, Hindustan
அக் 06, 2024 18:14

அரசியல் வியாதிகள் இந்த ஜாதி எழவை எவ்வளவு காலம் கட்டிக்கொண்டு அழப்போகிறார்கள்? தற்கால இளைஞர்கள் திறமைக்கே முதலிடம் கொடுக்கிறார்கள் என்ற எளிய விபரம் கிழட்டு அரசியல் வியாதிகளுக்கு இன்னும் புரியவில்லை.


முக்கிய வீடியோ