உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விபத்தில்லா கோவை உருவாக்க முதல்வர் தலைமையில் உறுதிமொழி

விபத்தில்லா கோவை உருவாக்க முதல்வர் தலைமையில் உறுதிமொழி

கோவை: 'நான் உயிர் காவலன்' திட்டத்தின் ஒரு பகுதியாக, விபத்தில்லா கோவையை வலியுறுத்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் உறுதிமொழி ஏற்றனர். கோவையில் சாலை விபத்துகளை பூஜ்யமாக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம், மாநகர போலீஸ், உயிர் அமைப்பு சார்பில், 'நான் உயிர் காவலன்' எனும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, 10 லட்சம் பேரை சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்க வைக்கும் நிகழ்ச்சி நேற்று பல்வேறு இடங்களில் நடந்தது. கோவை அரசு கலை கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதிமொழியை வாசிக்க பல்வேறு கல்லுாரி மாணவர்கள், பேராசிரியர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் வேலு, முத்துசாமி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, கலெக்டர் பவன்குமார், மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர், உயிர் அமைப்பின் அறங்காவலர்களான கிருஷ்ணா கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி, சி.ஆர்.ஐ., பம்ப்ஸ் தலைவர் சவுந்திரராஜன், அத்வைத் குழுமங்களின் தலைவர் ரவிஷாம், ரூட்ஸ் குழும தலைவர் ராமசாமி, பண்ணாரி அம்மன் குழும நிறுவனங்களின் தலைவர் பாலசுப்ரமணியன், உயிர் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் ராஜசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

த.வெ.க., கொடியை மொபைல் போனில் காட்டிய மாணவர்கள்

உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியை பார்க்க, எல்.இ.டி., திரைகள் வைக்கப்பட்டிருந்தன. முதல்வர் வரும் முன், அரங்கில் அமர்ந்திருந்த மாணவர்களை திரையில் காண்பித்தனர். இரு மாணவர்கள், தங்களது மொபைல்போன்களை உயர்த்திக் காண்பித்தனர். அதில், த.வெ.க., கட்சிக்கொடி தெரிந்தது. உடனே, நிகழ்ச்சி நேரலை ஒளிபரப்பை நிறுத்த, செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. தொலைக்காட்சி சேனல்களுக்கும் தெரிவிக்கப்பட்டு நேரலை நிறுத்தப்பட்டது. இதனால், அரங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல், கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. 'நான் உயிர் காவலன்' டி-சர்ட்களை தாங்கள் அணிந்திருந்த கருப்பு சட்டைக்கு மேல் சில மாணவர்கள் அணிந்து வந்தனர். அதன் பின்னரே அவர்களை அனுமதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ