போதிய உரங்கள் வழங்க கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
சென்னை:'தமிழகத்தில் விவசாயிகளின் உர தேவையை பூர்த்தி செய்ய, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின், மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவுக்கு, கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: தமிழகத்திற்கு, குறுவை பருவத்திற்கு, போதுமான உரங்கள் கிடைப்பதை உறுதி செய்ததற்கு நன்றி. தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை அக்.,16ல் துவங்கியது. அனைத்து நீர் தேக்கங்களிலும் தண்ணீர் உள்ளது. எனவே, சம்பா பருவத்தில் அதிகபட்ச நெல் சாகுபடி பரப்பளவில் உற்பத்தி செய்ய, விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், மக்காச்சோளம், உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, கரும்பு போன்ற பிற பயிர்களின் சாகுபடியும், மாநிலத்தில் முழு வீச்சில் நடந்து வருகிறது. நவம்பர் மாதத்தில் உரங்கள், குறிப்பாக யூரியா தேவை அதிகரிக்கும். எனவே, மாநிலத்தால் முன் மொழியப்பட்ட, 6.94 லட்சம் டன் யூரியா; 1.93 லட்சம் டன் டி.ஏ.பி.,; 1.88 லட்சம் டன் எம்.ஓ.பி.,; 5.15 லட்சம் டன் என்.பி.கே., காம்ப்ளக்ஸ் உரங்கள் தேவையை, உர நிறுவனங்கள் உரிய நேரத்தில் பரிசீலித்து, வரும் மாதங்களுக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில், சரியான நேரத்தில் வழங்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.