போலீஸ் – பக்தர்கள் இடையே கைகலப்பு
-– நமது நிருபர் –: திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றாததை கண்டித்து, திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் அரோகரா கோஷமிட்டபடி, போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த முயன்ற போது, போலீசாருடன் கைகலப்பு ஏற்பட்டது. இதில், பெண்கள் பலர் காயமடைந்தனர். தீபத்துாணில் தீபம் ஏற்றுவதை காண, மலைக்கு செல்லும் பாதை முன், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடினர். ஆனால், தீபம் ஏற்றப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பக்தர்கள், அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். போலீசார் அவர்களை கைது செய்ய முயன்ற போது, கைகலப்பு ஏற்பட்டது. இதில், பெண்கள் பலர் காயமடைந்தனர். பக்தர் ஒருவர் பஸ் கூரை மீது ஏறி, தீபம் ஏற்றாததை கண்டித்து கோஷமிட்டார். அவரையும் கைது செய்தனர். அப்பகுதியில் இரவு, 8:00 மணி வரை அசாதாரண சூழ்நிலை நிலவியது. இச்சம்பவத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களை, போலீசார் கைது செய்து தனியார் மண்டபங்களில் அடைத்தனர். போராட்டத்தின் போது, ‘ விஜய் ஒழிக. த.வெ.க., ஒழிக’ என்றும் பக்தர்கள் கோஷம் எழுப்பினர். முதல்வர் விஜய்க்கு, முருகன் தண்டனை கொடுப்பார். முருக பக்தர்கள் சாபத்தால், த.வெ.க., ஆட்சி விரைவில் வீட்டிற்கு செல்லும் என்றும், கோஷமிட்டனர்.
கமிஷனர் அலுவலகம் முற்றுகை
திருக்கழுக்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றப்படாததை கண்டித்து, பாரத் இந்து முன்னணி மாநிலத் தலைவர் பிரபு மற்றும் நிர்வாகிகள், முருக பக்தர்களுடன், நேற்று இரவு நுங்கம்பாக்கத்தில் உள்ள, ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். போலீசார் விரைந்து வந்து, 93 பேரை கைது செய்தனர். மேலும், அங்கு வர முயன்றவர்களை வழியிலேயே மடக்கி அனுப்பினர்.