உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசின் சட்டத்திருத்தம் வக்பு அமைப்பை முடக்கி விடும் தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் பேச்சு

மத்திய அரசின் சட்டத்திருத்தம் வக்பு அமைப்பை முடக்கி விடும் தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் பேச்சு

சென்னை:''மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்ட திருத்தம், வக்பு என்ற அமைப்பை காலப்போக்கில் செயல்பட விடாமல் முடக்கி விடும் என்பதால், அதை எதிர்க்க வேண்டியவர்களாக இருக்கிறோம்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.மத்திய அரசு, லோக்சபாவில் அறிமுகம் செய்துள்ள, வக்பு வாரிய சட்டத்திருத்த முன்வடிவை திரும்பப் பெற வலியுறுத்தி, சட்டசபையில் தனி தீர்மானத்தை, முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார்.

சபைக்கு வரவில்லை

அதை, புரட்சி பாரதம் - ஜெகன்மூர்த்தி, த.வா.க., - வேல்முருகன், கொ.ம.தே.க., - ஈஸ்வரன், ம.ம.க., - ஜவாஹிருல்லா, ம.தி.மு.க., - சதன் திருமலைக்குமார், இந்திய கம்யூ., - ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூ., - நாகை மாலி, வி.சி., - சிந்தனைச்செல்வன், முகமது ஷா நவாஸ், பா.ம.க., - ஜி.கே.மணி, காங்கிரஸ் - ஹசன் மவுலானா, அ.தி.மு.க., - வேலுமணி ஆகியோர் ஆதரித்து பேசினர். இந்த தீர்மானத்தை எதிர்த்து, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களான வானதி, காந்தி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். நயினார் நாகேந்திரன், சரஸ்வதி ஆகியோர் சபைக்கு வரவில்லை.இந்த தீர்மானத்தை முன்மொழிந்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:வேற்றுமையில் ஒற்றுமை கண்டு, மக்கள் அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் வாழும் நாடு இந்தியா. பல்வேறு இனங்கள், மொழிகள், மதங்கள், வழிபாட்டு நம்பிக்கைகள், பண்பாடுகள் இருப்பினும், அனைவரும் இந்திய நாட்டு மக்கள் என்ற உண்மை உணர்வோடு வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய நாட்டை ஆளும் அரசும், இத்தகைய உணர்வை கொண்ட அரசாகத்தான் செயல்பட வேண்டும். ஆனால், மத்திய பா.ஜ., அரசு, தன் செயல்பாடுகள் அனைத்தையும் ஒருவிதமான உள்நோக்கம் கொண்டதாக செய்து வருகிறது.எதைச் செய்தாலும், குறிப்பிட்ட தரப்பை வஞ்சிக்கும் வகையில் தான் திட்டங்களை தீட்டுகின்றனர். அதன்படி, வக்பு சட்ட திருத்தமானது, இஸ்லாமிய மக்களை வஞ்சிப்பதாக அமைந்துள்ளது.வக்பு சட்டம், 1954ம் ஆண்டு இயற்றப்பட்டது. அதில், 1995, 2013ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.அதில், மத்திய பா.ஜ., அரசு சில திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான முன்வரைவை பார்லிமென்டில், 2024 ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்துள்ளது.வக்பு வாரிய நிர்வாகத்தில் அரசின் தலையீட்டை அதிகரிப்பதாகவும், மத உரிமைகளை பாதிப்பதாகவும், மத்திய அரசின் சட்டத் திருத்தங்கள் இருந்ததால், தி.மு.க., உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் எதிர்த்தன.

சுயாட்சியை பாதிக்கும்

இதையடுத்து, பார்லி மென்ட் கூட்டுக்குழு ஆய்வுக்கு அதை அனுப்பினர். இந்தச் சட்டத்தை நாம் எதிர்ப்பதற்கு, பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.வக்பு வாரிய சட்டத்தை திருத்துவதன் வாயிலாக ஏற்படும் மோசமான விளைவுகள், சிலவற்றை பதிவு செய்ய விரும்புகிறேன். இதனால், மத்திய வக்பு கவுன்சில் மற்றும் மாநில வக்பு வாரியங்களின் கட்டமைப்பு மாற்றப்பட்டு, அரசின் கட்டுப்பாடு அதிகரிக்கிறது. இது, வக்பு நிறுவனங்களின் சுயாட்சியை பாதிக்கும்.அரசு சொத்து என்று அடையாளம் காணப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட வக்பு சொத்து, வக்பு சொத்தாகக் கருதப்படாது என்று, இந்தச் சட்டம் கூறுகிறது. இது, அரசுக்கு சொத்துக்களை மறுவகைப்படுத்தும் அதிகாரத்தை அளிக்கிறது.இஸ்லாமிய மக்களில், இரண்டு குறிப்பிட்ட வகுப்பினருக்கு தனி சொத்து வாரியம் உருவாக்க முயற்சி செய்கின்றனர். மாநில வக்பு வாரிய உறுப்பினர்களுக்கும், தலைவருக்கும் தேர்தல் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.மாநில வக்பு வாரியங்களில், இஸ்லாமியர் அல்லாத இரண்டு உறுப்பினர்களை சேர்க்க வேண்டுமென்று, இந்தச் சட்டம் கட்டாயப்படுத்துகிறது.

கடும் விவாதம்

இது, இஸ்லாமிய மத நிர்வாகத்தில் அரசு தலையிடுவதாகும். வக்பு நிர்வாகத்தில் அரசின் தலையீட்டை அதிகரிப்பதாக, மத்திய அரசின் சட்டத்திருத்தம் அமைந்துள்ளது. இதுகுறித்து கூட்டுக் குழுவிடம், தமிழக அரசு தெளிவாகச் சொல்லி இருக்கிறது. இஸ்லாமிய மக்களை வஞ்சிக்கும் இச்சட்டத்துக்கு எதிரான, நமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டியது அவசியம். இந்தச் சட்ட திருத்தமானது, வக்பு என்ற அமைப்பை காலப்போக்கில் செயல்பட விடாமல் முடக்கி விடும்.எனவே, நாம் எதிர்க்க வேண்டியவர்களாக இருக்கிறோம். மத நல்லிணக்கம் மற்றும் அனைவருக்குமான அரசு என்ற இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு, நாம் இதற்காகவே தீர்மானத்தை நிறைவேற்றுகிறோம்.இவ்வாறு முதல்வர் பேசினார்.முன்னதாக இந்த தீர்மானம் தொடர்பான விவாதத்தில் பங்கேற்று பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி பேசியபோது, அவருக்கும் முதல்வருக்கும் இடையே கடும் விவாதம் நடைபெற்றது.

என்ன சொல்கிறது தீர்மானம்?

இந்தியாவில் மத நல்லிணக்கத்துடன் அனைத்து மதங்களை சார்ந்த மக்களும், ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அனைத்து மக்களுக்கும், அவரவர் மதங்களை பின்பற்றுவதற்கு, அரசமைப்பு சட்டம் உரிமை வழங்கி இருக்கிறது.அதைப் பேணிக்காக்கும் கடமை, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு உள்ளது. அதற்கு மாறாக, இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில், 1995-ம் ஆண்டு வக்பு சட்டத்தை திருத்துவதற்கு, 2024 ஆகஸ்ட் மாதம், மத்திய அரசு லோக்சபாவில் அறிமுகம் செய்துள்ள வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை, தமிழக சட்டசபை ஒருமனதாக வலியுறுத்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !