மாணவர்களின் வணிகக் கண்காட்சி
கோவை: 'மாணவர்களுக்கு புத்தகத்தில் உள்ள பாடங்களை மட்டும் கற்பித்தால் போதாது. அவர்கள் படிக்கும் துறை சார்ந்த அனுபவத்தை பெறவும், கல்வி பயிலும் போதே ஏற்படுத்தி கொடுக்கவேண்டும்' என்று, இந்துஸ்தான் கலைஅறிவியல் கல்லூரியின் மேலாண்மை துறைத்தலைவர் சபிதா கூறினார். கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை மேலாண்மை பயிலும் மாணவர்கள் அத்துறை சார்பில் 'மார்க்கெட்டிங் எக்ஸ்போ 2011' என்ற பெயரில் வணிகவியல் விற்பனை கண்காட்சியை, கல்லூரி வளாகத்தில் நடத்தினர். இதில் 35க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைத்து மாணவர்களே பொருட்களை விற்பனை செய்தனர். கோவையில் உள்ள 30க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து மேலாண்மை பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்துஸ்தான் கலைஅறிவியல் கல்லூரியின் மேலாண்மை துறைத்தலைவர் சபிதா கூறியதாவது: மாணவர்களுக்கு புத்தகத்தில் உள்ள பாடங்களை மட்டும் கற்பித்தால் போதாது. படிக்கும் துறை சார்ந்த அனுபவத்தையும் கல்வி பயிலும் போதே ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். குறிப்பாக மேலாண்மைத்துறை பயிலும் மாணவர்களுக்கு இது மிகவும் முக்கியம். கல்லூரிப் படிப்பை முடித்து பட்டம் பெற்று செல்லும் மாணவர்கள் அடிப்படையாக சில விஷயங்களை அனுபவபூர்வமாக தெரிந்து கொண்டால்தான், வேலை வாய்ப்பை உடனே பெற முடியும். அதனால், வியாபாரம் சார்ந்து விற்பனை உத்திகளை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முதல் முறையாக இந்த மாதிரி கண்காட்சியை நடத்துகிறோம். இதன் மூலம் தனியாக வியாபாரம் துவங்கவும், ஒரு நிறுவனத்தின் பொறுப்பை ஏற்று திறன்பட நடத்தவும், தன்னம்பிக்கையோடு வாடிக்கையாளர்களை அணுகவும் உதவும். இவ்வாறு, சபிதா கூறினார்.