சென்னை: போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காரை அப்புறப்படுத்த கோரிய போக்குவரத்து போலீஸ்காரரை, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வும், அவரது ஆதரவாளர்களும் தாக்கிய சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அண்ணா சாலை போக்குவரத்து காவல் நிலைய போலீஸ்காரர் பிரபாகரன், 35. அண்ணா சாலை ஐ.ஓ.பி., வங்கி எதிரே உள்ள 'ஹீரோ' ஷோரூம் அருகே, போக்குவரத்திற்கு இடையூறாக 'டொயோட்டா பார்ச்சூனர்' என்ற சொகுசு கார் நேற்று மதியம் நிறுத்தப்பட்டிருந்தது.காரை அங்கிருந்து அகற்றுமாறு, ஓட்டுநரிடம் பிரபாகரன் கூறியுள்ளார். அப்போது, அதில் இருந்த காரின் உரிமையாளரான மயிலாடுதுறை காங்., - எம்.எல்.ஏ., ராஜகுமார், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், 'சாலையில் நின்று பிச்சை தானே எடுக்கிறீர்கள்' என, போலீசாரை வசை பாடியுள்ளார்.மேலும், அவரது ஆதரவாளர்களுடன் சேர்ந்து, பிரபாகரனை சரமாரியாக தாக்கி, அங்கிருந்து வேறு காரில் புறப்பட்டு சென்றார். கடமையை செய்த போலீஸ்காரர் மீது, பட்டப்பகலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வும், அவரது ஆதரவாளர்களும் தாக்குதல் நடத்திய சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து, போக்குவரத்து உயர் அதிகாரியிடம் கேட்டபோது, 'சம்பவம் குறித்து சட்டம் - ஒழுங்கு போலீசார் விசாரிக்கின்றனர். கண்டிப்பாக வழக்கு போடப்படும்' என்றார்.