மருவிய பாலினத்தவர் குழந்தை தத்தெடுப்பு 12 வாரங்களில் முடிவெடுக்க கோர்ட் உத்தரவு
சென்னை:'மருவிய பாலினத்தவர்கள், குழந்தையை தத்தெடுக்க அனுமதி வழங்கும் வகையில், விதிகளில் திருத்தம் கோரி அளிக்க உள்ள விண்ணப்பத்தை, 12 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் குடியேற்ற துறை அதிகாரியாக பணிபுரியும், மருவிய பாலினம் எனப்படும் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த பிரித்திகா யாஷினி, தன் பெற்றோரை பிரிந்து தனியாக வாழ்வதால் ஏற்படும் வெறுமையை போக்க, குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்தார். இதற்காக, டில்லியில் உள்ள மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தில், 'ஆன்லைன்' வாயிலாக, கடந்த 2021ல் விண்ணப்பம் செய்தார். ஆனால், மருவிய பாலினத்தவர் என்ற காரணத்தை கூறி, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அந்த உத்தரவை ரத்து செய்து, தன் விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில், பிரித்திகா யாஷினி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதி எம்.தண்டபாணி முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், 'மருவிய பாலினத்தவர் என்ற ஒரே காரணத்துக்காக, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு உள்ளது. இது, மருவிய பாலினத்தவர்கள் சட்டத்துக்கு விரோதமானது' என, தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு தரப்பில், 'சிறார் நீதி சட்டத்திலும், தத்தெடுப்பு விதிகளிலும், மருவிய பாலினத்தவர்கள் தத்தெடுக்க அனுமதி அளிக்கும் வகையில் விதிகள் ஏதும் இல்லை என்பதால், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது' என, தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மருவிய பாலினத்தவர்களும் தத்தெடுக்க அனுமதி வழங்கும் வகையில், மத்திய அரசுக்கு விண்ணப்பிக்க, மனுதாரர் பிரித்திகா யாஷினிக்கு உத்தரவிட்டார். மேலும், அந்த விண்ணப்பத்தை 12 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.