கிரைம் கார்னர்: தந்தையை கொன்ற மகனுக்கு காப்பு
சென்னை: தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் குற்றச்சம்பவங்கள் அரங்கேறி உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:மகனுக்கு காப்பு
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊரணியை சேர்ந்தவர் முனியசாமி, 57; கட்டட தொழிலாளி. இவரது மகன் ராகுல் காந்தி, 27. இருவருக்கும் மது பழக்கம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், ராகுல் காந்தி, முனியசாமி கழுத்தை அறுத்து கொலை செய்தார்.பின், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார், முனியசாமி உடலை மீட்டனர். போதையில் முனியசாமி, தாய் குறித்து அவதுாறாக பேசியதால் கொலை செய்ததாக ராகுல் காந்தி கூறினார்.'ஓசி' மது கேட்டவர் கொலை
பெரம்பலுார் மாவட்டம், கொளத்துார் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ், 37; லாரி டிரைவர். பல வழக்குகளில் சிறை சென்றவர். 13ம் தேதி கொளத்துார் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த இடத்துக்கு சென்று, இலவசமாக மது கேட்டுள்ளார்.அங்கிருந்தவர்கள், சுரேஷை சரமாரியாக தாக்கியதில், அவர் உயிரிழந்தார். அவரது உடலுக்கு தீ வைத்து எரிக்க முயன்றனர். மருவத்துார் போலீசாருக்கு வி.ஏ.ஓ., தகவல் கொடுத்தார். போலீசார், பிலிமிசை கிராமத்தை சேர்ந்த அறிவழகன், 38, என்பவரை கைது செய்து, மேலும் சிலரை தேடுகின்றனர்.மனைவி கொலை: கணவர் கைது
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே இளையன்விளையை சேர்ந்தவர் ஜஸ்டின் குமார், 55. இவரது மனைவி கஸ்துாரி, 50. இரு மகன்கள், மகள் உள்ளனர். நேற்று முன்தினம் வீட்டின் மாடியில் கணவன், மனைவிக்கு தகராறு ஏற்பட்டது.மகள் மாடிக்கு சென்று பார்த்தபோது, கஸ்துாரி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். மார்த்தாண்டம் போலீசார், நாகர்கோவில் வடசேரி பஸ் ஸ்டாண்டில் ஜஸ்டின் குமாரை நேற்று கைது செய்தனர்.கஸ்துாரி சொத்து பத்திரங்களை அடமானம் வைத்து, ஊதாரித்தனமாக செலவு செய்ததாகவும், தன்னை மதிக்காமல் நடந்து கொண்டதாகவும், அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் வெட்டி கொலை செய்ததாகவும் தெரிவித்தார். போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.மோசடி ராணுவ வீரர் சிக்கினார்
வேலுார் மாவட்டம், அணைக்கட்டு பங்களாமேடு பகுதியை சேர்ந்தவர் வீரக்குமார், 31; ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2022ல் முகநுால் மூலம், வேலுார் அடுத்த பென்னாத்துாரை சேர்ந்த, 27 வயது பெண் அறிமுகமானார். இருவரும் காதலித்தனர்.விடுமுறையில் வீரகுமார் ஊருக்கு வரும்போது நேரில் சந்தித்தனர். வீரகுமார், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பெண்ணுடன் பலமுறை தனிமையில் இருந்தார். அப்பெண்ணிடம், 35 லட்சம் ரூபாய் பணமும் வாங்கினார்.பின், திருமணம் செய்து கொள்ளாமல் காலம் கடத்திய நிலையில், பேசுவதை தவிர்த்தார். பெண் புகார் படி, வேலுார் மகளிர் போலீசார், வீரக்குமார் அவரது குடும்பத்தினர் நான்கு பேர் மீது வழக்குப்பதிந்தனர். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்த வீரக்குமாரை கைது செய்தனர்.