விழுப்புரம் - திருச்சி ரயில் தடத்தில் 13 சுரங்கப்பாதை அமைக்க முடிவு
சென்னை: விழுப்புரம் - திருச்சி தடத்தில், 13 இடங்களில் உள்ள ரயில்வே கேட்டுகளை நீக்கிவிட்டு, அப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை, தெற்கு ரயில்வே விரைவில் துவங்க உள்ளது. தெற்கு ரயில்வே, ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்காக, வளைவுகள் அகற்றுவது, ரயில் பாதைகளின் இருபுறமும் தடுப்புகள் அமைப்பது, ரயில்வே கேட்டுகளை நீக்குவது, சிக்னலை மேம்படுத்துவது போன்ற பணிகளை செய்து வருகிறது. அந்த வகையில், விழுப்புரம் - திருச்சி ரயில் பாதையில், 13 இடங்களில் ரயில் கேட்டுகளை நீக்க, அப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சென்னையை இணைக்கும் முக்கிய பாதைகளில், ரயில்களின் வேகத்தை அதிகரிக்க, மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. தென் மாவட்டங்களில் இருந்து, சென்னை வரும் விரைவு ரயில்களை, மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் இயக்க, பணிகள் நடந்து வருகின்றன. திருச்சி - விழுப்புரம் தடத்தில், மணிக்கு அதிகபட்சமாக 90 கி.மீ., வேகத்தில் செல்கின்றன. எனவே இந்த தடத்தில், தேர்வு செய்யப்பட்ட 13 இடங்களில் உள்ள கேட்டுகளை நீக்கி விட்டு, மாற்று ஏற்பாடு செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. தற்போது அப்பகுதிகளில் சுரங்கப்பாதை அமைக்க, தெற்கு ரயில்வே ஒப்புதல் வழங்கி, டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுரங்கப்பாதையும் அமைக்க, தலா 2.50 கோடி முதல் 3 கோடி ரூபாய் வரை செலவாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.