புதிய பணியிடங்கள் உருவாக்க அறநிலையத்துறை முடிவு
சென்னை : ஹிந்து சமய அறநிலைய துறையில், புதிதாக கோவில் செயல் அலுவலர் பணியிடங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஹிந்து அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் இருந்து, அனைத்து இணை கமிஷனர் அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: கோவில்களுக்கு தினமும் வரும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் நலன் கருதியும், கோவில்களை திறம்பட நிர்வகிக்கவும், கோவில்களில் வளர்ச்சி பணிகள் நடப்பதை கண்காணிக்கவும், புதிதாக இணை கமிஷனர், உதவி கமிஷனர், செயல் அலுவலர் பணியிடங்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், ஏற்கனவே உள்ள செயல் அலுவலர் பணியிடங்களை, நிலை உயர்த்தவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, விரிவாக பரிசீலனை செய்ய பல்வேறு விபரங்கள் தேவைப்படுகின்றன. எனவே, புதிதாக செயல் அலுவலர் பணியிடம் ஏற்படுத்த வேண்டிய கோவில்களின் பெயர்கள், ஊர், கோவில் சொத்துக்கள், கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை, திருவிழாக்கள் மற்றும் திருப்பணி விபரங்களுடன், சம்பந்தப்பட்ட கோவில் அறங்காவலர் குழு தீர்மான நகலையும், வரும் 14ம் தேதிக்குள், தனிநபர் வழியே, அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அதேபோல, செயல் அலுவலர் நிலை உயர்த்த வேண்டிய கோவில்களின் விபரங்களையும் அனுப்ப வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.