ராகிங் வழக்கில் நிபந்தனை ஜாமின் பெற்ற மாணவர்கள் 200 பக்க ஆய்வறிக்கை தாக்கல்
கோவை : 'ராகிங்' வழக்கில் கைது செய்யப்பட்ட தனியார் கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர், கோர்ட் உத்தரவுப்படி, ராகிங் குறித்த 200 பக்க 'ஆய்வறிக்கை'யை கல்லூரி முதல்வரின் ஒப்புதலுடன் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். கோவை,கொங்கு நாடு கலை, அறிவியல் கல்லூரியில் ஜூலை 28ல், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு குழுவுக்கு இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். வரவேற்பு குழுவினர் நேர்த்தியாக சேலை அணிந்து, கூந்தல் அலங்காரத்துடன் வரவேற்றனர். இதைப் பார்த்த சீனியர் மாணவர்கள், மாணவிகளை கேலி செய்து, ஆபாச வார்த்தைகளையும் கொட்டினர். பாதிக்கப்பட்ட 13 மாணவிகள், கல்லூரி முதல்வரிடம் புகார் தெரிவித்தனர். மாணவர்களை அழைத்து விசாரித்த கல்லூரி முதல்வர் துடியலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து சீனியர் மாணவர்கள் தங்கத்துரை, மணிகண்டன், பிரபாகரன், விஜயகாந்த், லலித்குமார் ஆகியோரை கைது செய்தனர்.ஜே.எம்.எண்: 1 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு,கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட மாணவர்கள் ஜாமின் கேட்டு, மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இம்மனுவை கடந்த 9ல் விசாரித்த மாஜிஸ்திரேட் சத்தியமூர்த்தி, மாணவர்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். இதன்படி,'ராகிங்' எப்போது தோன்றியது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் எத்தனை இடங்களில் ராகிங் நடந்தது. கைது செய்யப்பட்டவர்கள் விபபரம், விதிக்கப்பட்ட தண்டனை ஆகியவற்றை ஆராய வேண்டும். ராகிங் ஒழிப்பில் மாணவர்கள் பங்கு; தடுக்க வேண்டிய வழிமுறைகள் ஆகியன பற்றி ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தயாரிக்க வேண்டும். இந்த அறிக்கையை ஆக.,30க்குள் கல்லூரி முதல்வரிடம் மாணவர்கள் ஐந்து பேரும் சமர்ப்பிக்க வேண்டும் என நிபந்தனை விதித்து, ஐந்து பேருக்கும் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். கோர்ட் உத்தரவுப்படி, ராகிங் பற்றிய ஆய்வில் ஈடுபட்ட மாணவர்கள் 20 நாட்களுக்குப் பின், நேற்று முன்தினம் மாஜிஸ்திரேட் முன்னிலையில் தங்களது ஆய்வறிக்கையை தாக்கல் செய்தனர். முன்னதாக, இவ்வறிக்கையை கல்லூரி முதல்வரிடம் தாக்கல் செய்த மாணவர்கள் அதற்கான, ஒப்புகையை பெற்று மாஜிஸ்திரேட்டிடம் ஒப்படைத்தனர். அறிக்கையில் கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க, மாணவர்கள்-ஆசிரியர்கள் கொண்ட கூட்டுக்கமிட்டியை நியமித்து, கண்காணிக்க வேண்டும். சீனியர், ஜூனியர் மாணவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, யோசனை தெரிவித்திருந்தனர். இவ்வழக்கு பற்றி விசாரித்தபோது, ராகிங் குற்றத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கடந்த ஒரு மாதமாக சஸ்பெண்டில் உள்ளனர். தொடர்ந்து இந்த சஸ்பெண்ட் உத்தரவு நீடிக்கிறது. இதை நீக்க போலீசார் குற்றத்தை விசாரித்து 60 நாட்களில் குற்ற அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு இரண்டு ஆண்டு வரை சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படலாம்.