உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டால் தமிழகத்தை தலைகுனிய வைத்துள்ளது திமுக; இபிஎஸ்

சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டால் தமிழகத்தை தலைகுனிய வைத்துள்ளது திமுக; இபிஎஸ்

சென்னை: தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம் என்று கூறிய நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சி, சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டில், தமிழகத்தை தலைகுனிய வைத்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை; பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி, 54 மாதங்களுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியில், ஆட்சி என்று ஒன்று இருக்கிறதா ? தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையில், போலீசார் என்று ஒன்று செயல்படுகிறதா என்றே தெரியவில்லை. தீயசக்தி திமுகவின் காட்டாட்சி தர்பார் இன்று வரை தமிழக மக்கள் அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. தணலில் இட்ட புழுவாக மக்கள் அனுதினமும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை யாரும் வெளியில் சுதந்திரமாக நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது கொடுமையின் உச்சம். பல களடகங்களின் பலத்தைப் பயன்படுத்தி, 54 மாத கால விடியா திமுக ஆட்சியில் நடைபெற்ற குற்ற நிகழ்வுகளை மறைத்துவிடலாம்; தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்பி விடலாம் என்ற மமதையில் ஆட்சியாளர்கள் இருப்பது, அவர்களின் குரூர புத்தியின் வெளிப்பாடாகும்.அதிமுக ஆட்சிக் காலங்களில் சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதற்கு அரும்பாடுபட்ட தமிழக போலீசார், தற்போது, நிர்வாகத் திறனற்ற முதல்வரின் செயல்பாடற்ற நிலையினால் சீர்கெட்டிருப்பது வேதனையான ஒன்று. இந்த ஆட்சியில் நிர்வாகத் திறனற்ற போலீசாரின் அனைத்து அவயங்களும் செயலிழந்துவிட்டதைக் கண்டு மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள்.கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதை மருந்து புழக்கம் மற்றும் கடத்தல் உள்ளிட்ட அனைத்துக் குற்ற நிகழ்வுகளிலும், குற்றவாளிகளுடன் ஆளுங்கட்சி நிர்வாகிகள் கைகோர்த்து இருப்பதும், அவர்களைக் காப்பாற்றும் பணியில் போலீசார் சட்டப்படி செயல்படாத நிலை மற்றும் இந்த ஆட்சியின் அவலங்களை தைரியமாக எடுத்துரைக்கும் சமூக ஊடகங்களை முடக்குவது மற்றும் சட்ட விரோத என்கவுன்டர்களில் ஈடுபடுவதும்தான் திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியின் சாதனை.திமுக ஆட்சியில் பல குற்ற நிகழ்வுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதையும், பெண்களின் பாதுகாப்பு முற்றிலுமாக Compromise செய்திருப்பதையும் பார்க்கும்போது, விளம்பர மாடல் திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு கொஞ்சம்கூட சட்டத்தின் மீதோ, போலீசார் மீதோ அச்சமே இல்லை என்பதையே காட்டுகிறது.தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம் என்று கூறிய ஸ்டாலினின் நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஆட்சி, “சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டில், தமிழகத்தை தலைகுனிய வைத்துள்ளது.விடியா திமுக ஆட்சியில் நிரந்தர டிஜிபி இருந்தபோத போலீசார் சிறப்பாக செயல்படாத நிலையில், தற்போது போலீசாரின் செயல்பாடுகள் மிகுந்த கேள்விக்குறியாகி உள்ளது. தமிழகத்தில் டிஜிபி நியமிக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் வரை வழக்கு தொடர்ந்தும், இன்றுவரை இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. நிர்வாகத் திறனற்ற இந்த செயல்பாடுகளைப் பார்க்கும் போது, எம்ஜிஆரின் பாடல் ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது.“காட்டு புலியை வீட்டில் வைத்தாலும்,கறியும், சோறும் கலந்து வைத்தாலும்,குரங்கு கையில் மாலையை கொடுத்துகோபுரத்தின் மேல் நிற்க வைத்தாலும்,மாறாதய்யா மாறாது, மனமும், குணமும் மாறாது”'என்ற வரிகள் ஸ்டாலினுக்கு அப்படியே பொருந்துகிறது.நான்கரை ஆண்டு கால நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் தோல்வி. குறிப்பாக, மக்களைக் காக்கும் சட்டம்-ஒழுங்கின் தோல்வியால் தமிழகம் பாதிப்படைந்து வருவதை இனியும் மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அரசியல் சாசன சட்டப்படி மக்களைக் காப்பதாக உறுதிமொழி ஏற்று ஆட்சியமைத்த முதல்வர் ஸ்டாலின், தன் சுயநலத்திற்காக விளம்பர மாடல் ஆட்சி நடத்துவதை தமிழக மக்கள் இனியும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யும் வகையில், போலீசார் சுதந்திரமாக செயல்பட வலியுறுத்துவதோடு, மத்திய தேர்வாணைய விதிகளின்படி, அவர்கள் அனுப்பிய பட்டியலில் இருந்து ஒரு மூத்த போலீசார் அதிகாரியை தலைமை டிஜிபியாக உடனடியாக நியமனம் செய்ய வலியறுத்துகிறேன், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

மணிமுருகன்
நவ 09, 2025 23:08

திமுக கூட்டணி வன்மம் பித்தலாட்டம் ஊழல் போக்கு மாறாது என்பது தெள்ளதெளிவாக தெரிகறது


சமீபத்திய செய்தி