தி.மு.க.,வில் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் நடத்தும், 'ஒன் டூ ஒன்' நேரடி சந்திப்பை தொடர்ந்து, பல்வேறு நிர்வாகிகளின் பதவிகள் அடுத்தடுத்து பறிக்கப்படுகின்றன; முதல்வர் ஸ்டாலினின் இந்த அதிரடியால், கட்சி நிர்வாகிகள் மத்தியில் கலக்கம் நிலவுகிறது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு ஆறு மாதமே உள்ளது; 200 தொகுதிகளில் வெற்றி பெற தி.மு.க., இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்குமுன் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்த நிர்வாகிகளுடன் 'உடன் பிறப்பே வா' என்ற பெயரில், 'ஒன் டூ ஒன்' சந்திப்பை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வருகிறார். சட்டசபை தொகுதி வாரியாக நிர்வாகிகளை சந்திக்கும் ஸ்டாலின் கருத்து கேட்டு, கட்சியில் அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். மாவட்டச் செயலர் துவங்கி, ஒன்றியம், நகரம், வட்டச் செயலர் வரை களையெடுப்பு நடக்கிறது. கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: தொகுதிவாரியாக கட்சிக்குள் மாற்றங்களை முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கோவை மாநகர தி.மு.க., மாவட்டச் செயலராக இருந்த கார்த்திக் நீக்கப்பட்டு, செந்தமிழ் செல்வன் நியமிக்கப்பட்டார். அடுத்து விருதுநகர், சிவகாசி மாநகர தி.மு.க.,வில் 7 வட்ட செயலர்களுக்கு 'கல்தா' கொடுக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட தி.மு.க., கட்சி ரீதியாக, திருநெல்வேலி கிழக்கு - மேற்கு என, இரண்டாக பிரிக்கப்பட்டது. மேற்கு மாவட்ட பொறுப்பாளராக முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் நியமிக்கப்பட்டு அவருக்கு ஆலங்குளம், அம்பாசமுத்திரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கிரஹாம்பெல்லுக்கு ராதாபுரம், நாங்குநேரி தொகுதிகள் ஒதுக்கப்பட்டன; தருமபுரியில் அடுத்த களையெடுப்பு நடந்துள்ளது. தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க.,வில் தர்மபுரி, பென்னாகரம், அரூர் ஆகிய தொகுதிகள் உள்ளன. மாவட்ட பொறுப்பாளராக தி.மு.க., -- எம்.பி., மணி இருந்தார். தர்மபுரி மேற்கு மாவட்டத்தில் பாலக்கோடு, பாப்பிரெட்டிபட்டி ஆகிய தொகுதிகள் உள்ளன. இந்த மாவட்ட செயலராக, முன்னாள் அமைச்சர் பழனியப்பன் உள்ளார். இந்நிலையில், உறுப்பினர்கள் சேர்க்கை போன்ற பணி சரியாக நடக்கவில்லை என புகார் எழுந்தது. தி.மு.க., -- எம்.பி., மணி வசம் இருந்த தர்மபுரி கிழக்கு மாவட்டத்தின் அரூர் தொகுதியின் பொறுப்பு, தர்மபுரி மேற்கு மாவட்டத்தின் பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தென்காசி, விளாத்திகுளம் ஆகிய சட்டசபை தொகுதிகளின் நிர்வாகிகளை நேற்று ஸ்டாலின் சந்தித்தார். தென்காசி தொகுதி, தி.மு.க., நிர்வாகிகள் சிலர், அம்மாவட்ட பொறுப்பாளர் சரியாக செயல்படவில்லை என, புகார் தெரிவித்துள்ளனர். இங்கும் நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. களையெடுப்பு தொடர்வதால் கட்சியினர் கலக்கமடைந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கட்சியினருக்கு 'அசைன்மென்ட்!
'
சிவகாசி, மதுரை தெற்கு ஆகிய தொகுதிகளின் தி.மு.க., நிர்வாகிகளை, நேற்று முன்தினம்
ஸ்டாலின் சந்தித்தார். அப்போது, பிற கட்சிகளில், சுறுசுறுப்பானவர்கள், செல்வாக்கு மிக்கவர்களை தி.மு.க.,வுக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார்.
இது குறித்து தி.மு.க.,வினர் கூறியதாவது:ஆட்சியின் செயல்பாடு, நலத்திட்டங்களை தாண்டி, கூட்டணி பலத்தையே, தி.மு.க., பெரிதும் நம்பி உள்ளது. எதிர் கூட்டணியில் அ.தி.மு.க., - பா.ஜ., தவிர வேறு குறிப்பிடும் வகையிலான எந்த கட்சியும் தற்போது இல்லை. ஆனால், கரூர் சம்பவத்துக்கு பின், த.வெ.க.,வை பா.ஜ., வலைக்குள் கொண்டுவரும் முயற்சி நடக்கிறது. எனவே, அ.தி.மு.க., - பா.ஜ.,- த.வெ.க., கூட்டணி ஏற்பட்டால், தி.மு.க.,வுக்கு கடும் சிக்கல் ஏற்படும். இதை மனதில் வைத்தே, த.வெ.க., - அ.தி.மு.க., நிர்வாகிகளை தி.மு.க.,வுக்குள் இழுக்க, 'அசைன்மென்ட்' தரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -