UPDATED : மே 16, 2023 12:31 PM | ADDED : மே 16, 2023 09:00 AM
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து, 19 பேர் இறந்ததைத் தொடர்ந்து அனைத்து மாவட்டப் போலீசாரும், 'அலெர்ட்' ஆகியுள்ளனர். அதிரடி சாராய வேட்டையில் இறங்கி உள்ளனர். ஓரிரு நாட்களில் 1558 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதை ஏன் முன்பே செய்யவில்லை என்ற கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை தொடர்வதும், அதற்கு அரசியலும் காவல் துறையும் கை கொடுப்பதும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.இதற்கிடையில் கள்ளச்சாராயத்திற்கு பலியானவர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி என்பது ஆறுதல் நடவடிக்கையா அல்லது காய்ச்சும் தொழிலுக்கு ஆதரவு நடவடிக்கையா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் 10 லட்சம் ரூபாய் என்பது மேலும் பலரை இந்தப் பழக்கத்திற்குத் துாண்டி விடுவது போல் அமைந்து விடுமே என பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.'டாஸ்மாக்' விற்பனையைக் கண்காணிக்கவும், நேரத்திற்கு மீறி திறந்து வைக்கப்படும் கடைகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவும், கள்ளச்சாராயம் விற்பனையை முற்றிலும் தடுத்து, தொடர்ந்து நடைபெறாமல் கண்காணிக்கவும், தனி பிரிவை முந்தைய அரசு உருவாக்கி இருந்தது.அந்த பிரிவு கலைக்கப்பட்டு அங்கிருந்த அனைவரும் தற்போது கஞ்சா கடத்தலைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிக போதை தரும் கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழில் சர்வ வல்லமையுடன் நடைபெற்று வருகிறது.கள்ளச்சாராய வியாபாரத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அதிக பணம் கொடுத்து இரக்கம் காட்டும் விதத்தில் தீவிரமாக சிந்தித்து மாற்று நடவடிக்கை எடுப்பது சரியாக இருக்கும் என்ற ரீதியில், கடுமையான விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.இது தொடர்பான விமர்சனங்கள், கேலி கிண்டல்கள் சமூக வலைதளங்களில் 'மீம்ஸ்'களாக அதிகம் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.- நமது நிருபர்