சென்னை: 'தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல், வரும் 16ம் தேதி வெளியிடப்படும்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்னாயக் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:
தமிழகத்தில், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியில், கணக்கெடுப்பு பணி, வரும் 11ம் தேதி நிறைவடையும். வரைவு வாக்காளர் பட்டியல், வரும் 16ம் தேதி வெளியிடப்படும். திரும்ப பெறப்படாத கணக்கீட்டு படிவங்களின் பட்டியல், குறிப்பிட்ட முகவரியில் இல்லாத வாக்காளர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவு செய்தவர்கள் போன்ற காரணங்களுடன், வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பட்டியல், வரும் 11ம் தேதிக்கு பின் இறுதி செய்யப்படும். எனவே, வாக்காளர்கள் கணக்கீட்டு படிவங்களை விரைவாக சமர்ப்பிக்க வேண்டும். டிச.,16ம் தேதி முதல் ஜன.,15 வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க அல்லது ஏற்கனவே உள்ள பதிவுகள் குறித்து மறுப்பு தெரிவிக்கலாம். எந்த ஒரு தகுதியான குடிமகனும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாத வகையிலும், எந்த ஒரு தகுதியற்றவரும் சேர்க்கப்படாத வகையிலும், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களும் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.