உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல்லுாரி மாணவர்கள் போர்வையில் போதைக்கும்பல்

கல்லுாரி மாணவர்கள் போர்வையில் போதைக்கும்பல்

போதைப்பொருள் கும்பலை சேர்ந்தவர்கள், கல்லுாரி மாணவர்களின் அறைகளில் தங்கியிருந்து, அவர்களை மூளைச்சலவை செய்து, போதைப்பொருட்கள் சப்ளைக்கு பயன்படுத்துகின்றனர். இந்த, 'நெட்வொர்க்'கை முற்றிலும் ஒழிக்க, மாநிலம் முழுதும் கல்லுாரி, தனியார் விடுதிகளில், போலீசார் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும். கோவை புறநகரில், சில நாட்களுக்கு முன், கல்லுாரி மாணவர்கள் தங்கியிருந்த அறைகளில், 400 போலீசார் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். அப்போது, கல்லுாரி மாணவர்களுடன் தங்கியிருந்த போதைப்பொருட்கள் சப்ளையர்கள் சிக்கினர். பணத்தாசை கஞ்சா, குட்கா, கூல் லிப் போன்ற போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சில இடங்களில் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. அவை, கூலிப்படை பயன்படுத்தக் கூடியவை என்பதால், போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இது, கோவையில் நடந்த சம்பவம் என, புறந்தள்ளி விடக்கூடாது. ஏனெனில், போதைப்பொருட்கள் விற்பதற்காகவே, கல்லுாரி மாணவர்களின் அறைகளில் உடன் தங்கியிருந்து, நண்பர்களாக பழகி, பணத்தாசை மற்றும் ஆடம்பர வாழ்க்கையை காட்டி, வலையில் சிக்க வைக்கின்றனர். மூளைச்சலவைக்கு ஆளாகும் மாணவர்களை, கல்லுாரிகளுக்குள் போதைப்பொருள் விற்க பயன்படுத்துகின்றனர். கல்லுாரி கட்டணம் செலுத்த முடியாமல் சிரமப்படும் மாணவர்களையும், பணத்தாசை காண்பித்து பயன்படுத்தி வருகின்றனர். இது, ஒரு சமூக பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. விடுதிகளில் தங்கி, கல்லுாரிக்கு செல்லும் மாணவர்கள், பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள். போதை கும்பலின் வலையில் சிக்கும் இவர்கள், நாளடைவில் அவரவர் சார்ந்த ஊர்களில், அவற்றை சப்ளை செய்வதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

என்ன செய்யலாம்?

கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களில் விடுதிகளில் தங்கியிருப்போர் யார், யார், தனியார் விடுதிகளில் தங்கியிருப்போர், வீட்டில் இருந்து கல்லுாரிக்கு வருவோர் விபரங்களை தனித்தனியாக பட்டியலிட வேண்டும். அவர்கள் செயல்பாடுகளில் மாற்றம் தெரிந்தால், கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். தனியார் விடுதிகள், மேன்ஷன்கள் மற்றும் வாடகை வீடுகளில் தங்கியிருப்போரையும் கண்டறிய வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில், அரசு மற்றும் தனியார் கல்லுாரி விடுதி வார்டன்கள் மற்றும் தனியார் விடுதி பொறுப்பாளர்களை அழைத்து, ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். தனியார் விடுதி நடத்துவோர், கல்லுாரி மாணவர்கள் மற்றும் அவர்கள் போர்வையில் வருவோருக்கு, அறை மற்றும் வீடு வாடகைக்கு கொடுக்கும் முன், அவர்களை பற்றி முழுமையாக விசாரிக்க வேண்டும். போர்க்கால நடவடிக்கை ஆதார், ரேஷன் கார்டு நகல் பெற்ற பின்னரே அறை கொடுக்க வேண்டும். பெற்றோரை அழைத்து பேச வேண்டும். அவர்களை சந்திக்க வருவோரையும் தெரிந்திருக்க வேண்டும். வீடுகளை வாடகைக்கு கொடுத்திருந்தால், 'சிசிடிவி' கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்தியிருக்க வேண்டும். இந்த நடைமுறைகளை, மாநிலம் முழுதும் பின்பற்ற வேண்டும். போதைப்பொருட்கள் புழக்கத்தை போலீசாரால் மட்டுமே தடுத்து, ஒழித்து விட முடியாது. போலீசார், கல்லுாரி நிர்வாகங்கள், விடுதி பொறுப்பாளர்கள் மற்றும் பெற்றோர் இணைந்து செயல்பட்டால் மட்டுமே சாத்தியமாகும். தவறினால், ஒருபோதும் மீட்கவே முடியாத நிலை ஏற்பட்டு விடும். தமிழக அரசு போர்க்கால நடவடிக்கையில் இறங்கியாக வேண்டும்.

உறுதிமொழி ஆவணம்சமர்ப்பிக்க வேண்டும்

அனைத்து மாணவர் விடுதி அறைகளிலும், மூன்று மாதத்துக்கு ஒருமுறை வார்டன் நேரடியாக சோதனை நடத்தி, கல்லுாரி வளாகத்தில் போதைப் பொருட்கள் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். அந்த உறுதிமொழி ஆவணத்தில் வார்டன், கல்லுாரி முதல்வர் கையெழுத்திட்டு, போலீஸ் கமிஷனர், எஸ்.பி., அலுவலகத்திலும், அதன் நகலை கல்லுாரி எல்லைக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷனிலும் சமர்ப்பிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். - நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

raja
ஆக 27, 2025 06:20

இவ்வளவு செய்வதற்கு பதிலாக திருட்டு திமுகாவின் அயலக அணி அலுவலகம் மற்றும் பதவியில் இருக்கும் உறுப்பினர்களின் அலுவலகம் வீடுகளில் சோதனை இட்டாலே இந்த போதை மருந்து கள்ள சாராயம் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடும்...


veera
ஆக 27, 2025 05:52

முதலில் வீட்டு உரிமையாளர்கள் திருத்தவும் ஒரு அறையை 10 பேருக்கு வாடகை விடும் பழக்கம் ஒழிக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை