| ADDED : அக் 29, 2024 12:03 PM
சென்னை: பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தீபாவளியை ஒட்டி முன்கூட்டியே சம்பளம் வழங்க வேண்டும் என்று இ.பி.எஸ்., வலியுறுத்தி உள்ளார்.இது குறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் தமிழக அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் விரிவுரையாளர்களாகவும், பேராசிரியர்களாகவும் பணியாற்றி வந்த நிலையில், அவ்வப்போது ஏற்படும் காலியிடங்கள் உரிய விதிமுறைகளின் படி நிரப்பப்பட்டு வந்தன. தி.மு.க., ஆட்சியில், இந்த ஆட்சியாளர்களுக்கும், பல்கலைக்கழகங்களின் வேந்தராகத் திகழும் கவர்னருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதல்களால் பல பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக இருக்கும் அனைத்து உதவிப் பேராசிரியர் பணியிடங்களையும், வரும் கல்வி ஆண்டுக்குள் நிரப்பி உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு நல்வழி காட்ட வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்.மேலும் பகுதிநேர பள்ளி ஆசிரியர்கள் மனமகிழ்வுடன் தீபாவளியைக் கொண்டாடும் வகையில், அக்டோபர் மாதத்திற்கான ஊதியத்தை முன்கூட்டியே வழங்க வேண்டும் என்று தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அந்த பதிவில் இ.பி.எஸ்., வலியுறுத்தி உள்ளார்.