பெண் குழந்தைகள் திட்டத்தில் பயன் பெற குடும்ப வருமான உச்சவரம்பு உயர்வு
உடுமலை; தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும், மகளிர் மற்றும் பெண் குழந்தைகளுக்கான அரசு நலத்திட்டங்களில் பயன்பெறுவதற்கான, குடும்ப வருமான உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ், மகளிர் மற்றும் பெண் குழந்தைகள் பயன்பெறும் வகையில், பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டங்களில் பயன் பெற, குறிப்பிட்ட சான்றிதழ்களை பயனாளிகள் சமர்ப்பிக்க வேண்டும்.அதில், குடும்ப வருமான சான்றிதழும் உள்ளது. சான்றிதழுக்கான குடும்ப வருமானம் ரூ.72 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது குறிப்பிட்ட சில திட்டங்களில், இந்த வருமான வரம்பு உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.சமூக நலத்துறை அலுவலர்கள் கூறியதாவது:சமூக நலத்துறையின் கீழ் வழங்கப்படும், மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகளிர் திருமண நிதியுதவி திட்டம், முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், அரசு சேவை இல்லங்களில் உள்ளவர்களின் சேர்க்கை திட்டம் உள்ளிட்டவற்றின் குடும்ப வருமான உச்ச வரம்பு, ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி, சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவித்தது. தற்போது அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, தெரிவித்தனர்.