உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அப்பா ராமதாசும், மகன் அன்புமணியும்...சமரசம்!: காரசார விவாதங்கள் சகஜம் என பேட்டி

அப்பா ராமதாசும், மகன் அன்புமணியும்...சமரசம்!: காரசார விவாதங்கள் சகஜம் என பேட்டி

திண்டிவனம்:பா.ம.க.,வில் அப்பா ராமதாஸ், மகன் அன்புமணி இடையே நேற்று முன்தினம் வெடித்த மோதல், கட்சி நிர்வாகிகளின் சமரசத்தை அடுத்து, நேற்று நடந்த பேச்சில் சுமுக தீர்வு ஏற்பட்டுள்ளது. 'கட்சியில் காரசார விவாதங்கள் சகஜம். எங்களுக்குள் உள்ள பிரச்னையை பேசி தீர்த்துக் கொள்வோம்' எனக் கூறியுள்ள அன்புமணி, கட்சிக்குள் நிலவிய மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.ஆண்டு நிறைவையொட்டி, பா.ம.க., சிறப்பு பொதுக்குழு கூட்டம், நேற்று முன்தினம் புதுச்சேரி அடுத்த பட்டானுாரில் உள்ள சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நடந்தது. கூட்டத்தில், பா.ம.க., மாநில தலைவர் அன்புமணியின் உடன் பிறந்த சகோதரி ஸ்ரீகாந்தியின் மகனான முகுந்தனை, கட்சியின் மாநில இளைஞர் சங்க தலைவராக நியமித்து, அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டார்.இதற்கு, கட்சி தலைவரான அன்புமணி மேடையிலேயே எதிர்ப்பு தெரிவிக்கவே, இருவருக்கும் நேரடியாக வார்த்தை மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து, 'இது நான் உருவாக்கிய கட்சி. நான் எடுப்பது தான் முடிவு. அதை அனைவரும் ஏற்க வேண்டும். விருப்பம் இல்லாதவர்கள் கட்சியில் இருந்து வெளியேறலாம்' என, ராமதாஸ் ஆவேசமாக தெரிவித்தார்.உடனே, 'நான் சென்னை பனையூரில் தனியாக அலுவலகம் நடத்தி வருகிறேன். என்னை நிர்வாகிகள் அங்கு வந்து சந்திக்கலாம்' என, மேடையிலேயே மைக்கில் அறிவித்த அன்புமணி, தன் மொபைல் போன் எண்ணையும் அறிவித்து விட்டு, கோபமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தொடர்ந்து பனையூர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.தந்தை, மகன் இடையே ஏற்பட்ட நேரடி மோதல், கட்சியை பிளவுபடுத்தும் சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து, கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, தலைமை நிலைய செயலர் அன்பழகன் மற்றும் முன்னணி நிர்வாகிகள், அன்புமணியிடம் நேற்று முன்தினம் இரவு சமாதான பேச்சு நடத்தினர்.பின்னர், நேற்று காலை, கவுரவ தலைவர் மணி, முன்னாள் எம்.எல்.ஏ., சேலம் கார்த்திக், மாநில சமூக நீதி பேரவை நிர்வாகி பாலு ஆகியோர், ராமதாசிடம் சமாதான பேச்சு நடத்தினர். இதைத் தொடர்ந்து, அன்புமணி நேற்று பிற்பகல், 12:45 மணிக்கு தைலாபுரம் தோட்டத்திற்கு வந்தார். அங்கு ராமதாஸ், அன்புமணி, தாய் சரஸ்வதி ஆகியோர், கட்சியினரை அனுப்பிவிட்டு, அரை மணி நேரம் தனியாக ஆலோசனை நடத்தினர்.அதில் சுமுக தீர்வு ஏற்பட்டதை தொடர்ந்து, நிறுவனர் ராமதாஸ், கட்சியின் மாநில தலைவர் அன்புமணி, கவுரவ தலைவர் மணி, பொருளாளர் திலகபாமா, தலைமை நிலைய செயலர் அன்பழகன், மயிலம் எம்.எல்.ஏ., சிவகுமார் உள்ளிட்டோரிடம், கட்சி வளர்ச்சி, சித்திரை திருவிழா, வன்னியருக்கு தனி ஒதுக்கீடு ஆகியவை குறித்து, ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு தைலாபுரம் தோட்டத்தில் அன்புமணி, குடும்பத்தினருடன் மதிய உணவு அருந்திய பின், சென்னை புறப்பட்டு சென்றார்.சென்னை புறப்படும் முன் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி கூறியதாவது:கட்சியின் நிறுவனருடன், கட்சி வளர்ச்சி, எதிர்வரும் சட்டசபை தேர்தல், சித்திரை முழுநிலவு மாநாடு, ஜாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் அது தொடர்பான போராட்டங்கள் குறித்து, ஆலோசனை நடத்தப்பட்டது. பா.ம.க., சார்பில் நடந்த விவசாயிகள் மாநாட்டிற்கு பிறகு, அடுத்த கட்ட போராட்டம், எங்கு நடத்துவது என்பது குறித்து விவாதித்தோம்.வரும் 2025ம் ஆண்டு, எங்களுக்கு மிக முக்கியமான ஆண்டு. வரும் ஆண்டில், மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும் என, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம். அதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கை, ஜாதி வாரி கணக்கெடுப்பு, 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு போன்ற செயல்திட்டங்களை பற்றி எல்லாம், இன்று கட்சி நிறுவனருடன் விவாதித்தோம். அதற்கேற்ப நடவடிக்கையில் இறங்கியுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து நிருபர்கள், பொதுக்குழுவில் நடந்த மோதல் குறித்து கேட்டதற்கு, ''பா.ம.க., ஜனநாயக கட்சி. கட்சி பொதுக்குழுவில் காரசார விவாதம் நடப்பது, எல்லா கட்சியிலும் சகஜம் தான். எங்களுக்கு அய்யா... அய்யா தான். எங்கள் உட்கட்சி பிரச்னை பற்றி நாங்கள் பேசி தீர்த்துக் கொள்வோம்,'' என்றார்.சொந்த அக்கா மகனுக்கு கட்சியில் பதவி கொடுப்பது சம்பந்தமாக, அப்பா - மகனுக்கு இடையே வெடித்த மோதலுக்கு, நேற்றைய சுமுக பேச்சின் வாயிலாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பதவியில் தொடரும் முகுந்தன்

பா.ம.க., பொதுக்குழுவில் மோதல் ஏற்பட்ட பிறகு, ராமதாஸ் அறிவித்த மாநில இளைஞர் சங்க தலைவர் பதவியில் முகுந்தன் தொடர்வாரா என்ற சந்தேகம், கட்சியினர் மத்தியில் எழுந்தது. நேற்று தைலாபுரம் தோட்டத்தில் நடந்த பேச்சில், முகுந்தன் பதவி குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. இதனால் ராமதாஸ் அறிவித்தது போல், பா.ம.க. மாநில இளைஞர் சங்க தலைவர் பதவியில் முகுந்தன் தொடர்கிறார் என, கட்சி வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

SUBRAMANIAN P
டிச 30, 2024 13:53

நாடகமே உலகம், அதில் சிறப்பான நடிகர்கள் அனுப்புமணி ராமதாஸ். கடைசியில் விடியல் கட்சி போல குடும்ப சொத்தானது கட்சி. தீருவு எட்டப்பட்டது. யாரும் உடனே தப்பா நெனச்சுடப்படாது பாருங்க. அதான் ஒரு செட்டப்பு. சமரசம், சாம்பார் ரசம் சாப்பிட்டு கிளம்பியாச்சு. சோதா தொண்டனுக்கு வழக்கம்போல அல்வா கொடுத்தாச்சு... நீங்கதாண் திருந்தணும்


raju
டிச 30, 2024 11:39

எண்ணே ட்ராமா .. ஐயோஹ்


NaamIndian
டிச 30, 2024 11:03

சமரசம் மிளகுரசம் பூண்டுரசம்


RAAJ
டிச 30, 2024 08:43

நீங்கள் பொதுவெளியில் செய்தி சேனல்களுக்கு முன்னால் சண்டை போட்டால் நான்கு பேர் கேட்கத்தான் செய்வார்கள் வீட்டிற்குள் சண்டை போட்டால் யார் கேட்கப் போகிறார்கள். உங்கள் கட்சியும் குடும்பக் கட்சி தான் என்பதை நிரூபித்து விட்டீர்கள். சென்னை பனையூரில் வீடு தோட்டம் பங்களா தியாகராஜன் நகரில் வீடு பங்களா தைலாபுரத்தில் வீடு தோட்டம் துறவு ஏக்கர் கணக்கில் மக்கள் செய்தி தொலைக்காட்சி நிலையம் திண்டிவனம் அக்கம் பக்கம் முழுவதும் ஏக்கர் கணக்கில் நிலங்களை வளைத்து போட்டு ஆயிற்று உங்கள் சமூகத்திற்காக ஒரு கல்லூரி நடத்துகிறீர்கள் தைலாபுரம் சுற்றிலும் ஏகப்பட்ட ஏக்கர் கணக்கில் நிலங்கள். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோடிக்கணக்கில் வாங்கப்பட்ட விலை உயர்ந்த கார்கள் இன்னும் எங்கெங்கு என்னென்ன இருக்கிறது தெரியாது இவைகள் மொத்தமும் எப்படி வந்தது என்று கூற முடியுமா. உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் கட்சியில் பதவி பொறுப்பு உண்மையாக உழைக்கும் தொண்டனுக்கு பட்டை நாமம். பாட்டாளி மக்கள்கட்சி அனுதாபிகளே உங்கள் தலைவர்களின் குடும்பம் மொத்தமும் சுயநலவாதிகள் நீங்கள் பாட்டாளி மக்கள் கட்சியை புறக்கணிக்க வேண்டும். உங்களுக்காக ஒரு ஐந்து பைசா கூட அப்பாவும் பிள்ளையும் கொடுக்க மாட்டார்கள். பணம் பணம் என்று பேராசை பிடித்து அலையும் குடும்பம்.


Indhuindian
டிச 30, 2024 08:26

அடிச்சாலும் புடிச்சாலும் ஒண்ணா சேந்துக்கற அடிச்சதக்கு ஒன்னு புடிச்சதுக்கு ஒன்னு வாங்கிக்கரா


Kasimani Baskaran
டிச 30, 2024 07:14

அப்பாவை மகன் என்ன முகத்திலா அறைந்தார்? வார்த்தை போர் - மற்றப்படி அதிக சேதம் இல்லை. குடும்பக்கட்சிகளில் நடக்காத ஒன்றா...


கிஜன்
டிச 30, 2024 05:49

பல குடும்பங்களிலும் நடப்பதுதான் ... ஒரு உருப்படாத தாத்தா ...சொத்து பிரிக்கும்போது .... மகள் வழிப்பேரனுக்கு கொஞ்சம் அதிகம் கொடுத்துவிடுவார் .... மகன்கள் ....மகன் வழிப்பேரன்கள் முறைத்துக்கொண்டு நிற்பார்கள் .... எல்லோருக்கும் சிரமம் கொடுக்கும் இந்த தாத்தாக்கள் எப்போதுதான் திருந்துவார்களோ .... கூடிவாழ்ந்தால் கோடி நன்மை ....


ஜெய்ஹிந்த்புரம்
டிச 30, 2024 07:33

உங்க வீட்டுக்கதையை நினைத்து இங்கே கருத்து சொல்லி புலம்புறது தெரியுது ...


புதிய வீடியோ