அட்டு கானா... ஆள் கனா... "அவுட் ஆனா "மரண கானா...
எங்கெல்லாம் ஒரு இனக்குழு உடல் நோக, வியர்வை சிந்தி உழைக்கிறதோ, அங்கெல்லாம் பாட்டு தூள் பறக்கும் என்பது மனித குல நியதி. அந்த வகையில் சின்னக் காரியங்களுக்குக் கூட பாட்டு பாடும் தமிழ்மரபில், 'கானா' சென்னை மக்களின் தொன்மையான கலை வடிவம். கானா எங்கிருக்கிறதோ அங்கு விசிலும், குத்தாட்டமும், கும்மாளமும் குடி கொண்டிருக்கும். பிறப்போ, இறப்போ கானா இருக்கும் இடத்தில், நரம்புகள் துடிக்கும்; தாளம் இடுவதற்கு ஆறு கைகள்; ஏற்ற இடம்; ரசிக்க சின்ன கூட்டம் இவை இருந்தால் போதும்; அடிக்கிற அடியில் தாரை, தப்பட்டைகள் கிழிந்து தொங்கும். சில நேரம் மரண வீட்டில் இருந்தவர்கள் கூட, கலகலவென சிரித்த சம்பவங்கள் நிறைய உண்டு. கானாவின் பிறப்பிடம் ராயப்பேட்டை, சென்னை ஆள்தோட்டம் என ஒரு சாராரும், மும்பை தாராவியில் தான் உதித்தது என்று மறுசாராரும் சொல்லி வருகின்றனர். இதிலும் பல வகை திரைப்பாடலுக்கு சொந்த வரிகள் போட்டுப் பாடும், 'அட்டு' கானா, சென்னையின் வட்டார வழக்கில் பாடப்படும் ' ஆள்' கானா, கடலில் இருந்து வரும் மீனவர்களுக்கு வழிகாட்ட, பெரும் நெருப்பு கொளுத்திப் பாடும், ' தீப' கானா, போதை வஸ்துகளின் தீமை பற்றி எடுத்துரைக்கும் 'ஜிகிரி' கானா, சென்னையின் பெருமை பற்றி எடுத்துரைக்கும் 'மரபு' கானா, என கானாவில் ஐந்து பிரிவுகள் உண்டு. இதைத் தவிர கானா மரபில் சிறப்பு இடம் பிடித்துள்ளது, மனிதன் கருக் கொண்டது முதல் இறந்தது வரை எடுத்துரைக்கும், 'மரணகானா'. 13 பாடல்களையும், 63 கிளைக் கதைகளையும், கொண்ட, 'மரணகானா', தொடர்ந்து ஒன்பது மணிநேரம் பாடக்கூடியது. ''ரிக்ஷா இழுப்பது, மீன் பிடிப்பது,பெட்டி தூக்குவது, கைவண்டி இழுப்பது போன்ற கடினமான வேலைகளைச் செய்து முடித்து, மாலையில் அசதியுடன் வருகிற அவர்கள், தங்களின் களைப்பைப் போக்குவதற்கு கானாப பாடல்களைப் பயன்படுத்திக் கொண்டனர்,'' என்று கானாவின் பூர்வீகத்தை சொல்லும், பிரபல கானா பாடகர், 'மரண கானா' விஜி, ''தத்துவங்களும், துள்ளலும் சரிவிகிதத்தில் அமைந்த கானா, தேர்ந்த இசை வடிவம்,'' என்கிறார்.குடிசைப் பகுதிகளில் மட்டுமே வளர்ந்த கானா, நட்சத்திரவிடுதிகளில் கோலோச்சிக் கொண்டிருப்பது காலத்தின் கட்டாயமாகி விட்டது,'' நான் உலகம் முழுக்க பிரபலமாவதற்கு கானா தான் காரணம். உலகத்தமிழர்கள் கானாவைக் கொண்டாடுவது நெகிழ்ச்சியாக உள்ளது. பல நாடுகளில் மொழி புரியாதவர்கள் கூட, கானா இசைக்கு மயங்கி நடனமாடுவது, கானாவின் சிறப்பை எடுத்துக் காட்டுகிறது,'' என்கிறார் கானா உலகநாதன். இதுநாள் வரை இவர் வெளியிட்ட 33 கானா பாடல்களின் தொகுப்பு, தமிழகம் மட்டுமல்லாமல் உலகின் பல பகுதிகளிலும் விற்பனையில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது, '' இது கானாவால் கிடைத்த வாழ்க்கை,'' என்கிறார் இவர். 'காப்பிரைட்' இல்லாத மக்கள் பாட்டு குடிசைப் பகுதிகளில் கானா தோன்றியதால் தானோ என்னவோ, குடிசைத் தொழில் போல் கானா பாடல் பாடும் பாடகர்களும் பெருகி விட்டார்கள். இருந்தாலும் ஒரு சிலர் மேல் தான் மஞ்சள் வெளிச்சம் விழுந்திருக்கிறது. கிராமப்புற பாடல்களைப் போல், கானாவும் தவிர்க்க முடியாத இசை வடிவாக, திரை உலகத்தில் புகுந்து, மாற்றம் பெற்றுக் கொண்டிருக்கிறது. கானாவின் இசை வடிவத்தை, 'அப்படியே' உபயோகிக்கிற, 'ஒரிஜினல்' இசையமைப்பாளர்கள் இன்னும் இருக்கிறார்கள். எழுத்து வடிவத்தில் இல்லாமல் இருப்பதால் தான், இந்த அறிவுசார் திருட்டை நிருபிக்க முடியாமல், கானா பாடகர்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு, பஸ்சில் கானா பாடிய பலர் இன்று, திரைஉலகில் பெரும் பாடகர்களாக, நடிகர்களாக மாறியிருக்கிறார்கள்.புளியந்தோப்பு பழனி, (மாம்பலம் விக்கிற கண்ணம்மா), கானா உலகநாதன் (வாழ மீனுக்கும் வெளாங்கு மீனுக்கும் கல்யாணம்), கானா பாலா உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள். கானாவை சாவில் மட்டுமே பாடக் கூடிய நகரத்து ஒப்பாரியாக பார்க்கிற மனோபாவம் கொண்டவர்கள், இன்னும் இருக்கிறார்கள். இது குறித்து, 'மரணகானா' விஜியிடம் கேட்ட போது, அடித்தட்டு மக்களின் கலை வடிவமான கானா பாடலை, சாவுக்குப் பாடும் கூத்துப்பாட்டாகப் பார்ப்பது அபத்தம். தயவு செய்து அதை, குடித்து விட்டு பொறுப்பில்லாதவன் பாடுகிற உளறலாகப் புறக்கணித்து விடாதீர்கள். பாடியே விடுதலை அடைந்த நமது சமூகத்தின், எழுச்சியான துள்ளல் வடிவம்'' என்கிறார். அடித்தட்டு மக்களின் பிரச்னையைப் பேசக் கூடிய போராட்ட வடிவாக, கானாவைப் பயன்படுத்திக் கொண்ட பாடகர்களும் இருந்தார்கள். இடையில் சினிமா மோகம் கானாவையும் சோம்பேறியாக்கியதால் , கானாவின் பயணம் பாதை மாறிப் போய் விட்டது என்று வேதனைப்படுகின்றனர் கானா பாடகர்கள். தொன்மையான எல்லா கலை வடிவங்களுக்கு நேர்கிற சிக்கல்கள் தான் கானாவிற்கும் நேர்ந்து கொண்டிருக்கிறது.மரண கானா விஜி `பய` டேட்டா பெயர் : வைக்க பெற்றோர் இல்லை. அதனால் தத்தெடுத்து வளர்த்த பாலியல் தொழிலாளி விஜியின் பெயர் ஒட்டிக் கொண்டது. குரு: ஆயிரம் விளக்கு செல்வா தொழில் : மரண வீடுகளில் கானா பாடுவது வசிப்பிடம் : பெரும்பாலும் சுடுகாடு, பின் மரணவீடு. பெற்ற விருது: கணக்கில் அடங்காதது.