ஞானசேகரன் தாய் வழக்கு 3 மாதங்களுக்கு ஒத்திவைப்பு
சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், ஞானசேகரனை கடந்தாண்டு டிசம்பரில் போலீசார் கைது செய்தனர். அவர் மீது, 20க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்ததால், கடந்த ஜன., 5ல், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், ஞானசேகரனை சிறையில் அடைக்க, சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.தன் மகன் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்யும்படி, ஞானசேகரனின் தாய் கங்காதேவி, உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, 'மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையின்போதே, மற்ற குற்ற வழக்குகள் ஞானசேகரன் மீது நிலுவையில் இருப்பதை கருத்தில் கொண்டு, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்' என, காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அப்போது, 'ஞானசேகரன் மீதான மற்ற வழக்குகள், பொது ஒழுங்கை பாதிக்கும் வகையிலான வழக்குகள்' என குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை, ஆக., 28க்கு தள்ளிவைத்தனர்.