உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  அரசுக்கு ஜாக்டோ - ஜியோ அமைப்பு இறுதி கெடு

 அரசுக்கு ஜாக்டோ - ஜியோ அமைப்பு இறுதி கெடு

சென்னை: ''பழைய ஓய்வூதிய திட்டத்தை, டிசம்பர், 31க்குள் செயல்படுத்தாவிட்டால், போராட்டம் தீவிரமடையும்,'' என, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் கூறினார். தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என, 2021 சட்டசபை தேர்தலின் போது வாக்குறுதி அளிக்கப்பட்டது. நான்கரை ஆண்டுகள் கடந்த நிலையில், அதை செயல்படுத்த அரசு முன்வரவில்லை. எச்சரிக்கை மேலும், ஊதிய முரண்பாடுகளை களைதல், காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் கோரிக்கைகளும் நிலுவையில் உள்ளன. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசு ஊழியர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' சார்பில், நேற்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட விடுப்பு எடுத்தால், ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என, அரசு தலைமை செயலர் முருகானந்தம் எச்சரித்து இருந்தார். அதையும் மீறி, சென்னையில் தலைமை செயலகம், எழிலகம், நந்தனம் உள்ளிட்ட இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அரசு ஊழியர்கள் திரளாக பங்கேற்றதால், அலுவலகங்களில் வருகை பதிவு குறைந்தது. ஆர்ப்பாட்டம் பல மாவட்டங்களில் எழுச்சியுடன், இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு உள்ளது. சென்னை, சேப்பாக்கம், எழிலகம் வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் கூறியதாவது: பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என, நான்கரை ஆண்டுகளாக கேட்டு வருகிறோம். இதற்காக அமைக்கப்பட்ட குழு, இன்னும் பரிந்துரைகளை முழுமையாக அரசிடம் அளிக்கவில்லை. தி.மு.க., ஆட்சி முடிவதற்கு, 100 நாட்கள் தான் அவகாசம் உள்ளது. எனவே, டிசம்பர் 31ம் தேதிக்குள் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், போராட்டம் தீவிரம் அடையும். அரசு ஊழியர்களை மீண்டும் ஏமாற்றி, ஓட்டுகளை வாங்கலாம் என நினைத்தால், இனி அது நடக்காது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ