உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  குழந்தைகளுக்கு பிறவி குறைபாடு பரிசோதனை நடத்த அரசு உத்தரவு

 குழந்தைகளுக்கு பிறவி குறைபாடு பரிசோதனை நடத்த அரசு உத்தரவு

கோவை: தேசிய குழந்தைகள் நல திட்டத்தின் கீழ், பள்ளி, அங்கன்வாடிகளில் உள்ள குழந்தைகளுக்கு பிறவி குறைபாடு உள்ளதா என பரிசோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், பல்வேறு மருத்துவம் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில், தேசிய குழந்தைகள் நல திட்டத்தில், பிறந்தது முதல், 18 வயதுக்கு உட்பட்டோருக்கு பிறவி குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை பருவ நோய்கள், வளர்ச்சி தாமதம் மற்றும் குறைபாடு ஆகிய பாதிப்புகளுக்கு பரிசோதிப்பதோடு, உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இளம் வயதிலே நோய் கண்டறிவதன் மூலம், அதை குணப்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், இத்திட்டத்திற்கு அரசு அதிக முக்கியத்துவம் தருகிறது. கோவை மாவட்டத்தில் பிறக்கும்போதே இதய குறைபாடு, வாத இதய நோய், கால் வளைதல், உதடு, அன்னப்பிளவு, காது கேளாமை மற்றும் முதுகு தண்டுவட நரம்பு பாதிப்புகளுக்கு, அனைத்து வகை பள்ளி, அங்கன்வாடி குழந்தைகளுக்கு பரிசோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கிராம சுகாதாரம், ஆரம்ப, துணை சுகாதார நிலைய செவிலியர்கள், டாக்டர்கள் கொண்டு இப்பரிசோதனை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தேசிய சுகாதார இயக்க அலுவலர்கள் கூறுகையில், 'பிறவி குறைபாடு பாதிப்புகளுக்கு கடந்தாண்டு மட்டும் அங்கன்வாடியில், ஒரு லட்சத்து 44,732 பேர் மற்றும் பள்ளிகளில் 2 லட்சத்து 33,876 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. 'இதில், 628 பேருக்கு பிறவி குறைபாடு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, உரிய சிகிச்சை வழங்கப்பட்டது. 'இவர்கள் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இதேபோல இந்தாண்டும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை