கவர்னர்-முதல்வர் மோதல் அதிகரிப்பு காந்தி நினைவு தினத்தில் தனித்தனியே பங்கேற்பு
சென்னை:தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையில், மோதல் அதிகரித்து வரும் நிலையில், நேற்று காந்தி நினைவு தினத்தில், இருவரும் தனித்தனியே நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையே, கொள்கை ரீதியாக மோதல் ஏற்பட்டுள்ளது. அரசின் செயல்பாடுகளை, கவர்னர் அவ்வப்போது விமர்சித்து வருகிறார். அதற்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். ஆளும் கட்சியான தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலியும், கவர்னரை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் காந்தி நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே நடக்கும் நிகழ்வில், கவர்னரும், முதல்வரும் பங்கேற்பர். கடந்த ஆண்டு அப்பகுதியில், மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால், சென்னை அருங்காட்சியகத்தில், காந்தி சிலை அருகே, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில், கவர்னரும், முதல்வரும் பங்கேற்றனர். தற்போது இருவருக்கும் இடையே, கருத்து மோதல் அதிகரித்துள்ள நிலையில், நேற்று அருங்காட்சியகத்தில், காந்தி சிலை அருகே, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, அவரது உருவ படத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் மலர் துாவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.அங்கு வராத கவர்னர் ரவி, கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்திற்கு சென்றார். அங்கு காந்தி சிலைக்கு, மலர் துாவி மரியாதை செலுத்தினார். கீழ்ப்பாக்கத்தில் உள்ள பாரதிய வித்யா பவன் மாணவர்கள், பாரதம் குறித்த தேசபக்தி பாடல்கள், காந்தி பஜனைப் பாடல்களை பாடினர். சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த தியாகிகளை கவுரவிக்கும் வகையில், இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழியை, கவர்னர் ரவியின் முதன்மைச் செயலர் கிர்லோஷ் குமார் வாசிக்க, அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
முதல்வர் பிடிவாதமாக மறுப்பு
கவர்னர் ரவி குற்றச்சாட்டுகவர்னர் ரவி வெளியிட்ட அறிக்கை:காந்தி மண்டபம், சென்னை கிண்டி தேசிய உயிரியல் பூங்காவை ஒட்டியுள்ள, ஒரு பரந்த நிலத்தில், 1956ம் ஆண்டு காமராஜரால் கட்டப்பட்ட, பிரமாண்டமான நினைவுச் சின்னமாகும். காந்தி நினைவு நிகழ்வுகளை, அவரது பிறந்த நாள் மற்றும் உயிர்த் தியாக தினத்தை, நகர அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் நடத்துவதில் ஏதேனும் அர்த்தம் உள்ளதா?தேசப் பிதாவுக்கு உரிய மரியாதை செலுத்தவும், அத்தகைய நிகழ்வுகளை, காந்தி மண்டபத்தில், தகுந்த முறையில் நடத்தவும், முதல்வரிடம் நான் பலமுறை விடுத்த கோரிக்கைகள், பிடிவாதமான மறுப்பை சந்தித்தன. காந்தி தன்னுடைய வாழ்நாளில், திராவிட சித்தாந்தத்தை பின்பற்றுபவர்களால், கடுமையாக எதிர்க்கப்பட்டு, கேலி செய்யப்பட்டார். ஆனால், இன்றும் அவர் தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா?இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.