தோட்டக்கலை சாகுபடியை அதிகரிக்க அரசு முடிவு
சென்னை, : தோட்டக்கலை பொருட்களின் தேவை அதிகரித்து வரும் நிலையில், சாகுபடி பரப்பை, 45 லட்சம் ஏக்கராக உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது.திண்டுக்கல், தேனி, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், கோவை, நாமக்கல், திருப்பூர், கடலுார், திருவண்ணாமலை, வேலுார், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில், தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி நடக்கின்றன. கடந்தாண்டு, 8.26 லட்சம் ஏக்கரில் பழப்பயிர்கள், 8.96 லட்சம் ஏக்கரில் காய்கறிகள், 2.74 லட்சம் ஏக்கரில் வாசனை பயிர்கள் உட்பட, 40.2 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடந்தன. ஆனால், காய்கறிகள், பழங்கள் உற்பத்தியில் தமிழகம் இன்னும் தன்னிறைவு பெறவில்லை. காய்கறிகளின் தேவை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்த வண்ணம் உள்ளது.இதற்காக, ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, தெலுங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை நம்பி இருக்க வேண்டியுள்ளது. அங்கு விளைச்சல் குறையும் போது, தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உச்சத்தை அடைகிறது. எனவே, நடப்பாண்டு, தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி பரப்பை, 45 லட்சம் ஏக்கராக அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. குறிப்பாக, காய்கறிகள் சாகுபடியை, 10 லட்சம் ஏக்கருக்கு மேல் அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி, மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.