உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பணியிடங்களை அதிகரிக்க வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பணியிடங்களை அதிகரிக்க வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆசிரியர் பணி நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்கும் வகையில், பணியிடங்களை அதிகரிக்க வலியுறுத்தி, பட்டதாரி ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை, நுங்கம்பாக்கம், டி.பி.ஐ., வளாகத்தில், நேற்று காலை 200க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கூடி, தங்களின் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதிகாரிகளை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:

தமிழகத்தில் 2013ல், ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தி, 19,000 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அதன்பின், ஆசிரியர் தேர்வு வாரியம், ஆசிரியர் நியமனத்துக்கான தேர்வுகளை நடத்தவில்லை. கடந்த 11 ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஓய்வு, பதவி உயர்வு, விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர். கடந்த பிப்., 4ம் தேதி, ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில், தேர்ச்சி பெற்றோருக்கு மட்டும், ஆசிரியர் நியமனத் தேர்வு நடத்தப்பட்டது. அதில், 40,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், 37,000 ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தற்போது, ஆசிரியர் தேர்வாணையம், 3,192 காலியிடங்களை மட்டுமே நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. இது, பட்டதாரி ஆசிரியர் பயிற்சிகளையும், தகுதித்தேர்வையும் முடித்து, அரசு வேலைக்காக, 11 ஆண்டுகள் காத்திருந்த எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. எனவே, காலியாக உள்ள அனைத்து பணியிடங்களுக்கும், தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.மாணவர்களின் நலன் கருதி, அனைத்து தகுதிகளும் உள்ள எங்களுக்கு பணி வழங்கும் வகையில், காலி பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரி ஆசிரியர்கள்.

இடைநிலை ஆசிரியர் தேர்வர்கள் கோபம்: சென்னையில் முற்றுகை

இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுதி, 117 நாட்கள் ஆன நிலையில், இதுவரை உத்தேச விடைக்குறிப்பு வெளியிடப்படாததால், கோபமடைந்த தேர்வர்கள், நேற்று சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித் துறை அலுவலகமான டி.பி.ஐ., வளாகத்தை முற்றுகையிட்டனர்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, கடந்த ஜூலை 21ல் தேர்வு நடத்தப்பட்டது. இதில், 25,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆனாலும், உத்தேச விடைக்குறிப்பு, இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால், தேர்வர்கள் தங்களின் தகுதி நிலை குறித்து அறிய முடியாமல் உள்ளனர். கோபமடைந்த அவர்கள், சமூக வலைதளங்கள் வாயிலாக ஒன்றிணைந்து, நேற்று, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, டி.பி.ஐ., வளாகத்தை முற்றுகையிட்டனர். அவர்களை சமாதானப்படுத்திய போலீசார், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், தொடக்க கல்வித் துறை இயக்குனர் நரேஷ் ஆகியோரிடம், மனு அளிக்கும்படி கூறினர். அதன்படி அவர்கள் மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

10,000 போலி ஆசிரியர்களா? இல்லை என்கிறது துறை!

'பள்ளிகளில் போலி ஆசிரியர்கள் இல்லை' என, பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளிகளில் பணியாற்ற வேண்டிய, 10,000 ஆசிரியர்களுக்கு பதில், வேறு ஆசிரியர்கள் பாடம் நடத்துவதாக, சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்து, பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:தர்மபுரி மாவட்டம், ராமியாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் பாலாஜி, தனக்கு பதில் வேறொருவரை நியமித்தது கண்டுபிடிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுபோல், வேறு ஆசிரியர்கள் ஆள்மாறாட்டம் செய்தால், மாவட்டக் கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மேலாண்மை குழுவால் நியமிக்கப்பட்ட, 6,035 ஆசிரியர்களைத் தவிர, வேறு யாராவது பள்ளிகளில் பணியாற்றினால், தகவல் அளிக்கும்படி, மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் அறிக்கை கேட்கப்பட்டது. இதுவரை எந்த அறிக்கையும் வராத நிலையில், 10,000 போலி ஆசிரியர்கள் உள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
நவ 14, 2024 05:28

கண்துடைப்பு நாடகம் போடுவதில் தீமுக்கவுக்கு இணை திமுகதான். வீடே பற்றி எரிந்தாலும் திமுகாவுக்குத்தான் ஒட்டு என்று இருப்பவர்கள் இருக்கும்வரை திமுக்காவை யாரும் கேள்வி கேட்கமுடியாது.


சமீபத்திய செய்தி