பட்டா ரத்து செய்ய பொதுநல வழக்கு; அபராதம் விதித்தது உயர்நீதிமன்றம்
மதுரை : துாத்துக்குடி மாவட்டம் கிழக்கு திருச்செந்துாரில் சிலருக்கு வழங்கிய பட்டாவை ரத்து செய்யக்கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. மனுதாரர் பொது நல வழக்கு என்ற பெயரில் சட்ட நடைமுறைகளை தவறாக பயன்படுத்தியதால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது.உடன்குடி அசோக்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு: கிழக்கு திருச்செந்துாரில் குறிப்பிட்ட சர்வே எண்ணிலுள்ள நிலத்திற்கு சிலருக்கு சாதகமாக பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதை தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். அரசு நிலமான அதை மீட்க வேண்டும். துாத்துக்குடி சிப்காட் தாலுகா அலுவலக தாசில்தார் கோபால் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டர், திருச்செந்துார் ஆர்.டி.ஓ.,விற்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு: சம்பந்தப்பட்ட தனிநபர்களை இவ்வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்காமல் பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என மனுதாரர் கோருகிறார். பட்டா வழங்கியதால் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் கருதினால் அதிலுள்ள பதிவுகளில் மாற்றம் செய்ய பட்டா பாஸ்புத்தக சட்ட விதிகளை பயன்படுத்தி தீர்வு காண்பதே ஒரே வழி. மனுதாரர் துாய்மையான கரங்களுடன் இந்நீதிமன்றத்தை அணுகவில்லை. பொது நல வழக்கு என்ற பெயரில் சட்டத்தின் நடைமுறைகளை தவறாக பயன்படுத்தியுள்ளார். இம்மனு நிலைக்கத்தக்கதல்ல. தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அதை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர், சி.சி.ஆர்.ஐ., பெரியகுளம் ஸ்டேட் வங்கி கிளை கணக்கில் செலுத்த வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டனர்.