சட்டவிரோத திரைப்பட ஒளிபரப்பை தடுக்க ஐகோர்ட் உத்தரவு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் சட்ட விரோதமாக ஒளிபரப்பு செய்யப்படுவதை தடுக்காவிட்டால், தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டம் அடைவர்' என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், தம்மா திரைப்படத்தை சட்ட விரோதமாக வெளியிட தடை விதித்துள்ளது. நடிகை ராஷ்மிகா மந்தனா, ஆயுஷ்மான் குரானா ஆகியோர் நடிப்பில், ஆதித்யா ஸ்ரீபோத்தர் இயக்கத்தில், ஹிந்தியில் வெளியான தம்மா திரைப்படத்தை, 'மேட்டாக் பிலிம்ஸ்' என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம், 145 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு உள்ளது. தீபாவளியை முன்னிட்டு அக்., 21ல் வெளியான படத்தை, கேபிள் டிவி, இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடுவதை தடுக்க, இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.செந்தில்குமார், புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் சட்ட விரோதமாக ஒளிபரப்பு செய்யப்படுவதை தடுக்காவிட்டால், தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, தம்மா படத்தை இணையதளங்களிலும், கேபிள் 'டிவி'களிலும் சட்ட விரோதமாக வெளியிட, நவ., 14ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.